வாலாஜாபாத் சார்பதிவாளர் அலுவலகத்தில் இடிக்கப்பட்ட சுற்றுச்சுவர் கட்டப்படுமா?

வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகளில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பேரூராட்சி அலுவலகம், காவல் நிலையம், சார்பதிவாளர் அலுவலகம், கருவூலக அலுவலகம், அரசினர் மகளிர் விடுதி உள்ளிட்ட அலுவலகங்கள் அருகருகே செயல்படுகின்றன. இந்நிலையில், பேரூராட்சி அலுவலகம் முழுவதும் தற்போது சுற்றுச்சுவர் கட்டும் பணி நிறைவடைந்தநிலையில் இந்த சுவரின் அருகாமையில் சிறிய வழி ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சுவர் கட்டும் பணி நிறைவடைந்தநிலையில் சார்பதிவாளர் அலுவலகம் பின்புறம் உள்ள சுவர் சிறிய அளவில் இடிக்கப்பட்டு காணப்படுகின்றது.

இதனை முழுமைப்படுத்த வேண்டும் என இப்பகுதி சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியரிடமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் இது இடிக்கப்பட்ட சுவர் கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. மேலும், இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘வாலாஜாபாத் பேரூராட்சி அலுவலகத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்காக சார்பதிவாளர் அலுவலகத்தின் சுற்றுச்சுவர் சிறிய அளவில் இடிக்கப்பட்டு கட்டுமான பணிகள் செய்யப்பட்டன. தற்போது, பணி முடிவடைந்தநிலையில் இந்த சுவர் கட்டும் பணி நிறைவடையாமல் உள்ளன.

இதனால், இந்த வழியாக இரவு நேரங்களில் சமூகவிரோதிகளின் நடமாட்டங்கள் அதிகமாக காணப்படுவதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த வளாகம் முழுவதும் இரவு நேரங்களில் கடுமையான இருள் சூழ்ந்து காணப்படுவதால் சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமாகவும் மாற வாய்ப்பு உள்ளது. இது போன்றநிலையில் இங்கு உயர் கோபுர மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சிசிடிவி கேமராக்கள் அலுவலகங்களின் வெளிப்புறம் பொறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

The post வாலாஜாபாத் சார்பதிவாளர் அலுவலகத்தில் இடிக்கப்பட்ட சுற்றுச்சுவர் கட்டப்படுமா? appeared first on Dinakaran.

Related Stories: