மாமல்லபுரம் பஞ்ச பாண்டவர் மண்டபத்தில் மழைநீர் கசிவை தடுக்க ரசாயன கலவை மூலம் சீரமைப்பு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் பஞ்ச பாண்டவர் மண்டபத்தில், மழைநீர் கசிவை தடுக்கும் வகையில் ரசாயன கலவை மூலம் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. மாமல்லபுரம் உலக புகழ் வாய்ந்த சுற்றுலா தலமாகவும், சிற்பங்களுக்கு பெயர்போன நகரமாகவும் திகழ்ந்து வருகிறது. இங்கு, கடந்த 7ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்கள் இங்குள்ள பாறை குன்றுகளில் வெண்ணெய் உருண்டை கல், அர்ஜூனன் தபசு, பஞ்ச பாண்டவர்கள் மண்டபம், கிருஷ்ண மண்டபம், ஐந்து ரதம், கடற்கரை கோயில், புலிக்குகை, வராக மண்டபம், மகிஷாசூரமர்த்தினி மண்டபம் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்கள் மற்றும் குகைக் கோயில்களை செதுக்கினர்.

இதில், குறிப்பாக வெண்ணெய் உருண்டை கல், அர்ஜூனன் தபசு, பஞ்ச பாண்டவர்கள் மண்டபம், கிருஷ்ண மண்டபம் ஆகியவை மேற்கு ராஜவீதியில் அமைந்துள்ளது. இந்த, சிற்பங்களை சுற்றிப் பார்க்க உள்நாடு மற்றும் ஏராளமான வெளிநாட்டு பயணிகள் மாமல்லபுரம் வருகின்றனர். அப்படி, வருபவர்கள் பஞ்ச பாண்டவர் மண்டபத்தை சுற்றிப் பார்க்க அதிகளவு ஆர்வம் காட்டுகின்றனர். இங்குள்ள, குகை கோயில்களில் பெரிய குகை கோயிலாக இது பார்க்கப்படுகிறது. இந்த, மண்டபத்தில் உள்ள இடுக்குகளில் சில்லறை காசுகளை வைத்து விட்டு சென்றால், செய்யும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் என நினைத்து வட மாநில சுற்றுலா பயணிகள் சில்லறை காசுகளை வைத்து விட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

பஞ்ச பாண்டவர் மண்டபத்தின் மேல் பகுதியில் சில இடங்களில் சிறு சிறு விரிசல்கள் ஏற்பட்டது. மேலும், மழை பெய்யும் நேரங்களில் பஞ்ச பாண்டவர் மண்டபத்தின் மேல் பகுதியில் இருந்து மழை நீர் கசிந்து சுற்றுலாப் பயணிகள் மீது கொட்டியது. இதனால், சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்தனர். இந்த நிலையில், பஞ்ச பாண்டவர் மண்டபத்தின் மேல் பகுதியில் இருந்து மழைநீர் கசியாத வகையில், தொல்லியல் துறையினர் ரசாயன கலவை மூலம் சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்து தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

The post மாமல்லபுரம் பஞ்ச பாண்டவர் மண்டபத்தில் மழைநீர் கசிவை தடுக்க ரசாயன கலவை மூலம் சீரமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: