வேடந்தாங்கல் ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 21 பேருக்கு வீடுகட்ட பணி ஆணை

மதுராந்தகம்: வேடந்தாங்கல் ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில், 21 குடும்பத்தினருக்கு வீடு கட்ட அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம் வேடந்தாங்கல் ஊராட்சியில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயம் மிகவும் புகழ் பெற்றது. இந்த ஊராட்சியின் தலைவராக திமுகவை சேர்ந்த வேதாச்சலம் என்பவர் இருந்து வருகிறர். இவர் இந்த ஊராட்சிக்கு தேவையான பல்வேறு நல திட்ட உதவிகளை மக்களுக்காக கேட்டு பெறுவதில் வேகமாக செயல்பட கூடியவர்கள் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், வேடந்தாங்கல் ஊராட்சியை சேர்ந்த மக்களுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் தற்போது 21 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த வீடுகள் ஒவ்வொன்றிற்கும் தமிழக அரசு சார்பில் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. அது மட்டும் இன்றி இந்த பயனாளிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூபாய் ஒரு லட்சம் கடன் உதவியும் குறைந்த வட்டியில் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் வேதாசலம் கூறுகையில், ‘மிகவும் பிரபலமான ஊராட்சியாக இந்த வேடந்தாங்கல் ஊராட்சி இருந்தபோதும் கடந்த இரண்டு ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்த ஆட்சியாளர்களால் இந்த ஊராட்சியில் குறிப்பிடத்தக்க பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால், தற்போது காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, அச்சிறுப்பாக்கம் ஒன்றிய செயலாளர் தம்பு மற்றும் அச்சிறுப்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் ஒரத்தி கண்ணன் ஆகியோர் உறுதுணையோடுதான் இந்த ஊராட்சியில் பல நலத்திட்டங்களை செயல்படுத்த முடிகிறது’ என்றார்.

The post வேடந்தாங்கல் ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 21 பேருக்கு வீடுகட்ட பணி ஆணை appeared first on Dinakaran.

Related Stories: