கூடுவாஞ்சேரியில் பரபரப்பு பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்த பள்ளி சுற்றுச்சுவர்: நள்ளிரவில் விழுந்ததால் உயிர் சேதம் தவிர்ப்பு

கூடுவாஞ்சேரி: நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியின் 150 ஆடி தூர சுற்றுச்சுவர் நள்ளிரவில் இடிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நள்ளிரவு நேரம் என்பதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி-நெல்லிக்குப்பம் சாலை ஓரத்தில் 7 ஏக்கர் பரப்பளவில் நந்திவரம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி உள்ளது. இங்கு, சுமார் 2700 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியை சுற்றி பொதுப்பணித்துறை சார்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.

இந்த, சுற்றுச்சுவரானது 5 அடி, 7 அடி மற்றும் 10 அடி உயரத்தில் கட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுமார் 12:20 மணி அளவில், 10 அடி உயரத்தில் கட்டப்பட்டிருந்த பள்ளியின் சுற்றுச்சுவர் பயங்கர சத்தத்துடன் இடிந்து கீழே விழுந்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பதறியடித்து வெளியே ஓடி வந்து பார்த்தபோது, இடிந்து விழுந்த 10 அடி சுற்றுச்சுவரானது சுமார் 150 அடி நீளம் வரை கீழே விழுந்து கிடந்ததை கண்டு அதிச்சியடைந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட காந்திநகர் பகுதி அருகில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி அமைந்துள்ளது. இந்நிலையில், திடீரென பயங்கர சத்தம் கேட்டதால், பூமி அதிர்ச்சி ஏற்பட்டு விட்டதோ அல்லது யார் வீட்டிலாவது சிலிண்டர் வெடித்துவிட்டதா என்ற அச்சத்தில் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து பார்த்தபோது, இப்பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தோம். நல்வாய்ப்பாக இரவு நேரம் என்பதால் மாணவர்கள் யாரும் இல்லை. இதனால், உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. தற்போது, சுற்று சுவர் இடிந்து விழுந்த பகுதியை ஒட்டியபடி உள்ள சின்டெக்ஸ் தொட்டி, மின்கம்பங்கள், அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பம் மற்றும் கல்வெட்டு ஆகியவை இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளன.

மேலும், இப்பள்ளியில் கட்டப்ட்டிருக்கும் 5 அடி உயரம் கொண்ட சுற்றுச்சுவரின் வழியாக சமூக விரோதிகள் சிலர் எகிறி குதித்து மது அருந்துவது, புகை பிடிப்பது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பள்ளி சுற்றுசுவர் அனைத்தையும் முற்றிலுமாக அகற்றிவிட்டு 10 அடி உயரத்தில் புதிதாக சுற்றுசுவர் அமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். நள்ளிரவு நேரம் என்பதால் சுற்று சுவர் பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டாலும் உயிர் தேசம் தவிர்க்கப்பட்டது.

The post கூடுவாஞ்சேரியில் பரபரப்பு பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்த பள்ளி சுற்றுச்சுவர்: நள்ளிரவில் விழுந்ததால் உயிர் சேதம் தவிர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: