நாகர்கோவில், ஜன.31: நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணிக்கு வரும் பிப்ரவரி 2ம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.இதனை கொச்சுவேளியில் இருந்து இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவர்கள் வேளாங்கண்ணி மாதா கோவிலுக்கும், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி மாதா கோவிலுக்கும் தினசரி செல்கின்றனர். குமரி மாவட்டத்திலிருந்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற மாவட்டங்களுக்கு ரயிலில் செல்ல நேரடி ரயில் இல்லாத காரணத்தால் தற்போது திருச்சி சென்றுவிட்டு அங்கிருந்து அடுத்த ரயிலில் பயணிக்கும் நிலை இருந்தது.இந்தநிலையில் வேளாங்கண்ணி செல்ல வசதியாக நாகர்கோவிலிருந்து மதுரை, திருச்சி வழியாக சிறப்பு வாராந்திர ரயிலை ரயில்வேத்துறை இந்த வருடம் அறிவித்துள்ளது. ரயில் எண் 06093 பிப்ரவரி 2ம் தேதி முதல் மார்ச் 23ம் தேதி வரை சனிக்கிழமைகளில் நாகர்கோவிலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணிக்கு ஞாயிற்றுகிழமை அதிகாலை 3.30 மணிக்கு சென்றடையும். ரயில் எண் 06094 பிப்ரவரி 5ம் தேதி முதல் 26ம் தேதி வரை வேளாங்கண்ணியிலிருந்து செவ்வாய்கிழமைகளில் இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவிலுக்கு புதன்கிழமை காலை 7.55 மணிக்கு வந்து சேரும். வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், நீடாமங்கலம், திருவாரூர், நாகப்பட்டிணம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் இரண்டு குளிர்சாதன பெட்டிகள் ஆறு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி, நான்கு முன்பதிவு செய்யப்படாதபெட்டிகள், இரண்டு ஊனமுற்றோர் மற்றம் சரக்கு பெட்டிகள் என மொத்தம் 14 பெட்டிகள் கொண்டு இயக்கப்படுகிறது.
நாகர்கோவிலிலுந்து வேளாங்கண்ணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டதை போல கொல்லம் - வேளாங்கண்ணி வழி செங்கோட்டை மார்க்கத்திலும் வாராந்திர சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ரயில்களிலும் எந்த மார்க்கத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ரயில்வேத்துறைக்கு நல்ல வருவாய் பெற்று தருமோ அந்த வழித்தடத்தில் இயங்கும் ரயில் நிரந்தர ரயிலாக இயக்கப்பட இருக்கிறது.