நாகர்கோவில், ஜன.10: குமரியில் பெரு வியாபாரிகள் பதுக்கல் காரணமாக சிகரெட் விலை பாக்கெட்டிற்கு 20 வரை உயர்ந்து விற்பனையாகிறது. ஆண்டு தோறும் ஒன்றிய அரசின் பட்ஜெட் மார்ச் மாதம் தாக்கல் ஆகும் ஒரு மாதத்திற்கு முன்பே செயற்கையாக சிகரெட் தட்டுபாடு உருவாக்கப்படும். இதனால், மொத்த வியாபாரிகளிடம் இருந்து சிகரெட் வாங்க சில்லறை வியாபாரிகள் போட்டி போடுவதும், இதன் காரணமாக சிகரெட் விலையை மொத்த வியாபாரிகள் முதல் சில்லறை வியாபாரிகள் வரை கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வது வழக்கம். ஆனால், கடந்த பல ஆண்டுகளாக சிகரெட் விலை உயர்த்தப்படவில்லை. கடந்தாண்டு, புகையிலை பொருட்கள் மீது வரி அதிகரித்த போதிலும் சிகரெட் விலை உயரவில்லை. இந்நிலையில், ஒன்றிய அரசு சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீது வரி விதிப்பை அதிகளவில் உயர்த்தும் என தகவல் பரவியது. இதனையடுத்து, குமரியில் கடந்த 3 நாட்களாக பிரபல பிராண்டுகளின் சிகரெட் விநியோகஸ்தர்களுக்கு வரத்து குறைந்தது. இதனால், மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை கடைவியாபாரிகள் கூடுதல் விலைக்கு சிகரெட்டுகளை வாங்கி வருகின்றனர்.
கடந்த 3 நாட்கள் முன்பு, விநியோகஸ்தர்களிடமிருந்து வாங்கி விற்கும் மொத்த வியாபார கடைகளில் ரூ.91க்கு விற்ற அதிக நகர்வு உடைய பிரபல பிராண்ட் சிகரெட் பாக்கெட் 3 நாட்களில் 4 முறை விலை உயர்ந்து ரூ.100க்கு மொத்த விற்பனை கடைகளில் விற்பனையானது. இதுபோல், ரூ.75க்கு விற்பனை ஆன மற்றொரு சிகரெட் பாக்கெட் ரூ.80க்கும், 156க்கு விற்பனை ஆன கிங் சைஸ் சிகரெட், ரூ.175க்கும், அதிக மூவிங் இல்லாத மின்ட் சேர்ந்த சிகரெட் ரூ.86லிருந்து ரூ.91க்கும் (இதன் அதிக பட்ச சில்லறை விற்பனை விலை ரூ.100), பிரபலம் இல்லாத சிகரெட்டுகள் கூட ரூ.55 லிருந்து ரூ.58க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதனையடுத்து சில சில்லறை விற்பனையாளர் வாங்கும் விலையில் இருந்து எப்போதும் கிடைக்கும் விலைக்கு விற்றாலும், சில சில்லறை வியாபாரிகள் தங்கள் பங்கிற்கு 10 எண்ணம் கொண்ட பிரபல சிகரெட் பாக்கெட் விலையை ரூ.120 என பாக்கெட்டிற்கு ரூ.20 லாபம் வைத்து விற்பனை செய்கின்றனர்.
இதுகுறித்து கோட்டாறை சேர்ந்த மொத்த வியாபாரியிடம் கேட்டபோது, சிகரெட் விலை உயரலாம் என தகவல் பரவியதை அடுத்து, விநியோகஸதர்களுக்கே சிகரெட் பண்டல்கள் வரத்து குறைந்து விட்டது. அவர்கள், தங்களிடம் வாங்கும் பெரு வியாபாரிகளுக்கு வழக்கமான விலையில் விற்பனை செய்தாலும், விற்பனை செய்யும், பண்டல்கள் அளவை கணிசமாக குறைத்து விட்டனர். இதனால், ஒன்றிய அரசு முறைப்படி வரி அதிகரிப்பு, விலை உயர்வு போன்றவை அதிகார பூர்வமாக இல்லாவிட்டாலும், கூட வழக்கமான விலையை விட அதிக விலை கொடுத்து சிகரெட் பண்டல்கள் வாங்கி வருகிறோம்.
தங்கம் விலை போல், கடந்த 3 நாட்களில் ஒரே நாளில் இருமுறை கூட விலை உயர்ந்தது. எங்களிடம் இருப்பு இருக்கும் பிராண்டுகளை வழக்கமான விலைக்கு விற்றாலும், இருப்பு முடிந்து, புதிய பண்டல்கள் வாங்கும் போது, வழக்கமான எங்களின் லாபத்தை கணக்கிட்டு சில்லறை வியாபாரிகளுக்கு விற்பனை செய்கிறோம். ஆனால், ஒரு சில வியாபாரிகள் ஒரு சிகரெட்டிற்கு ரூ.2ம் 10 எண்ணம் கொண்ட பாக்கெட்டிற்கு ரூ.20ம் லாபம் கிடைக்கும் வகையில், கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். இனிமேல், அரசு வரியை உயர்த்திய பின்னர், புதிய அதிக பட்ச சில்லறை விற்பனை விலையை குறிப்பிட்டு, சிகரெட் பாக்கெட்டுகள் விற்பனைக்கு வரும்வரை, விலை இனி உயராமல், இதே நிலையில் நீடிக்கலாம் என நினைக்கிறோம் என்றார். இதற்கு முன்பு கொரோனா ஊரடங்கின் போது, வியாபாரிகளால், அதிக பட்ச விலையை விட பல மடங்கு கூடுதல் விலைக்கு சிகரெட் விற்பனை ஆனது குறிப்பிடத் தக்கது.
