ஆட்டோ டிரைவர் சரமாரி வெட்டி கொலை

சென்னை, நவ.20:  பூந்தமல்லி அருகே நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த ஆட்டோ டிரைவரை சிலர் சரமாரியாக வெட்டி கொன்றனர். பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கம், மாரியம்மன் கோவில் தெருவை சேந்தவர் மோட்டு (எ) சத்தியகிரிராவ் (30). சொந்தமாக ஆட்டோ வைத்து, பூந்தமல்லி பகுதியில் வாடகைக்கு ஓட்டி வந்தார். மேலும் அந்தப் பகுதியில் ரவுடி போலவும் வலம் வந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு பிரியா(26) என்ற மனைவியும் லோகேஷ் (5), சர்வேஷ்(3) என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். மோட்டு ஆரம்பத்தில் சென்னை அயனாவரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அங்கு ஒருவருடன் ஏற்பட்ட மோதலில், அவரை  கொலை செய்து விட்டு, பூந்தமல்லி பகுதிக்கு குடி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று  சவாரி முடிந்ததும், தனது வீட்டின் அருகேயுள்ள தண்ணீர் இன்றி வறண்டு போன குளத்தில், நண்பர்களுடன் அமர்ந்து மோட்டு மது அருந்திக் கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு ஆட்டோவில் வந்த ஏழு பேர் கொண்ட கும்பல், கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது. உடனே  மது அருந்திக் கொண்டிருந்த அவரது நண்பர்கள் அங்கிருந்து தலை தெறிக்க ஓட்டம் பிடித்தனர்.

இதனால் ஆட்டோவில் வந்த கும்பல் சாவகாசமாக அவரை சுற்றிவளைத்து அரிவாளால் வெட்டியது. அவர்களிடம் இருந்து உயிர் பிழைக்க, தப்பி ஓடிய அவரை விடாமல் துரத்திச் சென்று அந்த கும்பல் வெட்டி சாய்த்தது.  இதில் சம்பவ இடத்திலேயே மோட்டு பரிதாபகரமாக உயிரிழந்தார். அவர் இறந்ததை உறுதி செய்த அந்த கும்பல் அங்கிருந்து, தாங்கள் வந்த ஆட்டோவில் ஏறி தப்பிச் சென்றது. இந்த கொலை சம்பவம் குறித்து  தகவல் அறிந்ததும் பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு  வந்தனர். மோட்டுவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிந்து, எனவே, ஏற்கனவே நடந்த கொலைக்கு பழிக்குப் பழியாக மோட்டு கொலை செய்யப்பட்டாரா அல்லது நேற்று முன்தினம் பூந்தமல்லி ஆட்டோ ஸ்டாண்டில் ஆயுத பூஜை விழாவிழாவில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். மேலும் மோட்டு உடன் மது அருந்திக் கொண்டிருந்த நண்பர்களிடம் போலீசார் விசாரிக்கையில், சபீர் மற்றும் பூபாலன் உள்ளிட்ட ஏழு பேர் அடங்கிய கும்பல் இந்த கொலை செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்கள் பிடிபட்டால் மட்டுமே கொலைக்கான உண்மையான காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: