விஜயதசமி விழாவையொட்டி வீட்டாவர்சிட்டி கல்வி நிறுவனத்தில் தங்க ஊசி திருவிழா

மயிலாடுதுறை,அக்.23: மயிலாடுதுறை அடுத்துள்ள மணல்மேட்டில் உள்ள விவேகானந்தா கல்வி நிறுவனத்தில் ஆண்டு தோறும் கல்வி செல்வத்தை அள்ளி தரும் சரஸ்வதிக்கு உகந்த நாளான விஜயதசமியன்று புதிதாக பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு, நன்றாக படிக்கும் திறன், சரளமாக பேசுதல், எழுதும் திறன் ஆகியவை வளரவேண்டும் என்பதற்காக தங்க ஊசியை கொண்டு குழந்தைகளின் நாக்கில் எழுதுதல் மற்றும் நவதானியங்களில் எழுத்துக்களை குழந்தைகளின் விரல்களை பிடித்து எழுத வைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கல்விக்கு உகந்த சரஸ்வதி தேவியின் படம் வண்ண விளக்குகளாலும், குழந்தைகள் விரும்பும் சாக்லேட், எழுத்து வடிவிலான பிஸ்கட், ஸ்வீட்ஸ் பழங்கள், பேனாக்கள், காகிதங்களை கொண்டு பிரம்மாண்டமாக அலங்கரிக்கப்பட்டு, இறுதியில் அலங்காரத்தில் இருந்த சாக்லேட், பிஸ்கட், பழங்கள், பேனாக்கள் ஆகியவைகள் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி விவேகானந்தா கல்வி நிறுவனத்தில் தங்க ஊசி திருவிழாவாக ஆண்டுதோறும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு விஜயதசமியையொட்டி தங்க ஊசி திருவிழா நடைபெற்றது.

இதில் 200க்கும் மேற்பட்ட குழந்தைகளின் நாக்கில் தங்க ஊசியை தேனில் தொட்டு எழுதப்பட்டது. விழாவில் குழந்தைகளின் பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள், பல்வேறு சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். மேலும் பள்ளியில், நவராத்தியையொட்டி அனைத்து மதங்களையும் சேர்ந்த சுவாமிகளின் உருவ பொம்மைகள் மற்றும் கொலு பொம்மைகள் வைத்து 9 நாட்கள் சிறப்பு நவராத்திரி பூஜைகள் நடைபெற்றன. அனைத்து மத பாடல்களும் பாடப்பட்டது. விவேகானந்தா கல்வி நிறுவனத்தின் மற்றும் ஓர்அங்கமான வீட்டா வெர்ஸிட்டி இண்டர் நேஷனல் பள்ளி உலக தரத்தில் கட்டமைக்கப்பட்டு இயங்கி வருகிறது.  அங்கும் கொலு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதில் வீட்டாவேர்சிட்டி பள்ளி தாளாளர் சங்கீதா, இயக்குநர்கள் குஜேந்திரன், சுவாமிநாதன், விவேகானந்தா பள்ளி தாளாளர் ரமேஷ் , பள்ளி தலைமையாசிரியர் மஞ்சு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: