மணல் காண்ட்ராக்டரை கொலை செய்த மனைவி, உறவினருக்கு ஆயுள் தண்டனை

பட்டுக்கோட்டை, ஆக. 15:புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள துவார்கல்லுப்பட்டியை சேர்ந்த மணல் காண்ட்ராக்டர் கணேசன் (45). இவர மனைவி முத்துலட்சுமி (42). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இவர் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தினார். 2009ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி மனைவி மற்றும் மகளை அடித்து அவர்களது நடத்தையில் சந்தேகப்பட்டு திட்டினார்.  அப்போது முத்துலட்சுமியின் உறவினர் ரமேஷ் (32) வந்து தகராறை சமாதானம் செய்து வைத்தார். அதற்கு சமாதானம் செய்ய நீ யார், எனது மனைவியுடன் தொடர்பு வைத்துள்ளாய் என்று திட்டினார். அப்போது எனது கணவரால் தொந்தரவாக உள்ளது. எனவே கணேசனை கொலை செய்து விடுமாறு ரமேஷிடம் முத்துலட்சுமி கூறினார்.

இதனால் மறுநாள் பட்டுக்கோட்டையில் மணல் காண்ட்ராக்ட் சம்மந்தமாக பேசி எடுக்கலாம் என கணேசனை ரமேஷ் அழைத்து சென்றார். பின்னர் மதுபாட்டில் வாங்கி கொண்டு நசுவினி ஆற்றுப்பாலம் அருகே கணேசனை மது குடிக்க வைத்தார். இதனால் மயங்கிய கணேசனை அரிவாளால் வெட்டி கொலை செய்து ஆற்றங்கரையில் புதைத்துவிட்டு ரமேஷ் சென்றுவிட்டார். இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர போலீசார் வழக்குப்பதிந்து கொலை வழக்கு தொடர்பாக முத்துலட்சுமி, ரமேஷ், குமரேசன், சுரேஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.  இந்த வழக்கு விசாரணை, பட்டுக்கோட்டை 3வது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு  நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் வழக்கு விசாரணை நேற்று நடந்தது. வழக்கை விசாரித்து முத்துலட்சுமி, ரமேஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ரவீந்திரன் தீர்ப்பு கூறினார்.

Related Stories: