திட்டக்குடி தாசில்தார் முன்னிலையில் திருக்குளம் எல்லை அளவிடும் பணி தீவிரம்

திட்டக்குடி, ஆக. 13: திட்டக்குடி அசனாம்பிகை உடனுறை ஸ்ரீ வைத்தியநாத சுவாமி ஆலய திருக்குளத்தின் எல்லைகளை தாசில்தார் தலைமையில் வருவாய் துறை, நிலஅளவை துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அளவீடு செய்தனர். திட்டக்குடியில் ஸ்ரீ வைத்தியநாத சுவாமி ஆயத்திற்கு முன் திருக்குளத்தை 31 நபர்கள் ஆக்கிரமித்து வணிக வளாகம், வீடுகள் என கட்டி பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பல்வேறு அமைப்புகள் பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. அதிகாரிகளிடமும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதனையடுத்து நேற்று முன்தினம் தாசில்தார் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் திருக்குளத்தை அளவீடு செய்து எல்லை காட்டுவது எனவும், ஆக்கிரமிப்பு இருந்தால் ஆக்கிரமிப்புதாரர்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்பை அகற்றி கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று தாசில்தார் சத்தியன் தலைமையில் துணை தாசில்தார்கள் ஜெயசீலன், ராமர், வருவாய் ஆய்வாளர் தலைமை நில அளவர் சண்முகம், உதவி நில அளவர் மோகனபிரியா, கோயில் செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன், தக்கார் பழனியம்மாள், மற்றும் வருவாய் துறை, நில அளவை துறையினர் திருக்குளத்தை அளவீடு செய்தனர். தொடர்ந்து தாசில்தார் சத்தியன் நிருபர்களிடம் கூறுகையில், திருக்குளம் அளவீடு செய்யப்பட்டுள்ளது. திருக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஆக்கிரமிப்புதாரர்கள் தாங்களாகவே வரும் 19ம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ள வேண்டும். இல்லை எனில் 20ம் தேதி காவல்துறை பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை வருவாய் துறையினர் மூலம் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு அகற்றப்படும் என்றார்.

Related Stories: