தரங்கம்பாடியில் இன்று அச்சு கலையின் தந்தை சீகன்பால்கு பிறந்தநாள் விழா

தரங்கம்பாடி, ஜூலை 10:  நாகை மாவட்டம், தரங்கம்பாடியில் இந்தியாவின் அச்சக தந்தை என்று போற்றப்படும் சீகன் பால்குவுக்கு இன்று (10ம் தேதி) 337 வது பிறந்த நாள் கொண்டாபடுகிறது. ஜெர்மனியை சேர்ந்த பாத்லோமேயுசீகன்பால்கு 10.7.1682 அன்று ஜெர்மனியில் சாக்சோனி மாநிலத்தில் உள்ள புல்ஸ்நிட்ஸ் என்ற ஊரில் பிறந்தார். அவர் டென்மார்க் அரசர் 4ம் பிரட்ரிக்கால் சமய பணி செய்ய இந்தியாவிற்கு அனுப்பபட்டார். 11.11.1705 அன்று தன் நண்பர் ஹென்ரிக்புளுசோவுடன் கோபன்ஹேகனில் இருந்து கப்பலில் இந்தியா புறப்பட்டார். 222 நாட்கள் கப்பல் பயணத்திற்கு பின் 9.7.1706 அன்று நாகை மாவட்டம் தரங்கம்பாடி வந்தார். அவர். தரங்கம்பாடி வந்ததன் நினைவாக நினைவு கல் ஒன்றும் அமைக்கபட்டுள்ளது. தரங்கம்பாடி வந்த சீகன்பால்கு தமிழ்மொழியில் ஆர்வம் கொண்டு 8 மாதங்களில் எழுதவும் படிக்கவும் கற்று கொண்டார். அதை தொடர்ந்து தமிழில்  அச்சு எழுத்துக்களை வடிவமைத்து அச்சு கலையில் தமிழை கொண்டு வர பெரும் முயற்சி மேற்கொண்டு தரங்கம்பாடியில் தமிழில் அச்சு கூடத்தை 24.10.1712 அன்று அமைத்தார்.

1715ம் ஆண்டு இந்தியாவில் முதல் முதலாக பொறையாரில் ஒரு காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலையும், அச்சு மை தயாரிக்கும் தொழிற்சாலையும், பித்தளை, ஈயம் போன்ற உலோகங்களின் தமிழ் எழுத்துகளை உருவாக்கும் ஒரு எழுத்து தயாரிக்கும் கூடத்தையும் ஏற்படுத்தினார். சீகன்பால்கு தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் அகராதி, செந்தமிழ் அகராதி இந்து சமய கடவுள்களின் வரலாறு உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். 1715 ல் மரியாடாரத்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். தரங்கம்பாடியில் ஆசியாவின் முதல் புராட்டஸ்டண்டு தேவாலயமான புதிய எருசலேம் ஆலயத்தை 11.10.1718ல் கட்டி முடித்தார். அதன் பின் 23.2.1919ல் இயற்கை எய்தினார். இவரது உடல் தரங்கம்பாடி புதிய எருசலேம் ஆலயத்தில் பலி பீடத்தின் முன் அடக்கம் செய்யபட்டுள்ளது. அவரது 337வது பிறந்த நாளில் இன்று (10ம் தேதி) கொண்டாடப்படுகிறது.

Related Stories: