நாகப்பட்டினம், டிச. 24: ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத சட்டத்தை கண்டித்து நாகப்பட்டினத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்திய சிஐடியூவை சேர்ந்த 48 பேரை போலீசார் கைது செய்தனர். தொழிலாளர்களின் 44 தொழில் சட்டங்களை ஒன்றிய அரசு திருத்தி 4 சட்டங்களாக மாற்றியுள்ளதை கண்டித்தும், ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, நாகப்பட்டினம் கோர்ட் வளாகத்தில் உள்ள தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிஐடியூ சார்பில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவனருட்செல்வன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிஐடியூவினர், திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 10 பெண்கள் உட்பட 48 பேரை கைது செய்தனர்.
