நாகப்பட்டினம், டிச.19: நாகை மாவட்டத்திற்கு 2025-26ம் ஆண்டிற்கான தொழிற்கடன் ரூ.5,171 கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்தார். நாகப்பட்டினம் ஊரக வளர்ச்சி முககை கூட்ட அரங்கில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம் சார்பில் சிறப்பு தொழிற்கடன் வசதியாக்கல் முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமை வகித்தார்.
அப்போது கலெக்டர் பேசியதாவது: தமிழ்நாடு அரசின் 2025 -26ம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கையின்படி நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ரூ.5,171.55 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறைக்கு மட்டும் ரூ.564.11 கோடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தொழிற்கடன் இலக்கில் நவம்பர் 2025 வரை ரூ.441.30 கோடி அதாவது 78.23 சதவீதம் இலக்கை எய்தியுள்ளோம் .
நிர்ணயியக்கப்பட்ட இலக்கை அடைய ஒவ்வொரு ஆண்டும் கடன் உதவி வசதியாக்கல் முகாம் நாகப்பட்டினத்தில் நடத்தப்பட்டு வருகின்றது. தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு மானியத்துடன் கூடிய சுய தொழில் கடன் திட்டங்கள் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களின் மூலம் வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி தொழில் தொடங்க புதிய தொழில் முனைவோர்களுக்கு வங்கிகள் மூலம் கடன் வசதி செய்து தரப்படுகிறது.
இந்த வாய்ப்பை தொழில் தொடங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களும் மற்றும் வங்கியாளர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசு சிறிய அளவில் தொழில் செய்யும் கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கலைஞர் கைவினை திட்டம் கடந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 25 வகையான தொழில்கள் தொடங்க வங்கி கடன் உதவியும், 25 சதவிதம் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் இதுவரை 413 பயனாளிகளுக்கு ரூ.99.26 லட்சம் மானியத்துடன் ரூ.742.33 லட்சம் திட்ட மதிப்பிலான கடன் ஒப்பளிப்பு பெறபட்டுள்ளது.
தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு கடன் திட்டம் கடந்த நவம்பர் மாதம் 20ம் தேதி முதல் தொடங்கப்பட்டு குறுகிய காலத்திலேயே நமது மாவட்டத்திலுள்ள 6 வட்டாரங்களிலும் மகளிர் திட்ட அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்களுடனும் இணைந்து 248 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மகளிருக்கு வியாபாரம், சேவை தொழில் மற்றும் உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்சமாக கடன் உதவியாக ரூ.10 லட்சம் வரை வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் 25 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை வழங்கப்படுகிறது. கடன் உதவி வசதியாக்கல் முகாமில் சிறப்பு அம்சமாக கலைஞர் கைவினை திட்டம் மற்றும் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு கடன் திட்டத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் கூறினார்.
மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழிற்கடனாக 61 பயனாளிகளுக்கு ரூ.10.39 கோடி கடன் ஒப்பளிப்பு ஆணையை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார். பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் வெங்கடேசன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மண்டல மேலாளர் நாகராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
