வேதாரண்யம், டிச.22: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா குரவப்புலம் சீதாலட்சுமி தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகளிடையே “மரங்களை பாதுகாப்போம் பூமியை காப்போம்” விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வேதாரண்யம் தாலுகா குரவப்புலத்தில், கீழ்வேளூர் வேளாண் கல்லூரி மாணவர்களின் கிராமப்புற அனுபவப் பயிற்சியின் ஒரு பகுதியாக, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நிகழ்ச்சியை மாணவிகள் அமிர்தாலட்சுமி ,ஆஷிகா,ஹரிப்பிரியா, ஹரினி சுபலட்சுமி, கலைமதி, லஷிகா, பத்மாவதி,சுந்தரசினேகா ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.நிகழ்ச்சியில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு மரங்களின் முக்கியத்துவம், சூழல் இணக்கம், காற்றுத் தூய்மை மற்றும் மழை பெய்ய மரங்கள் தரும் பங்களிப்பு பற்றிய விளக்கங்கள் எளிய முறையில் வழங்கப்பட்டன. மேலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும், மழைநீரை சேமிக்க வேண்டும் போன்ற விழிப்புணர்வுகளும் பகிரப்பட்டது.
மேலும் சூழலியல் பாதுகாப்பை முன்னிட்டு,விழாவின் ஒருபகுதியாக மாணவிகள் பள்ளிக்கு மரக்கன்றுகள் வழங்கினார்கள். வீட்டில் மரங்களை நட்டு பாதுகாக்கவேண்டும் என்று மாணவர்களை ஊக்குவிக்கப்பட்டனர். பசுமை பாதுகாப்பின் அவசியம் மற்றும் எதிர்கால சூழல் மாற்றம் பற்றியும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. இறுதியில் மாணவர்கள் “மரங்களைக் காப்போம் பூமியை காப்போம்” என்ற உறுதிமொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
