301ல் 40 படகு மட்டுமே கடலுக்கு சென்றன சூறாவளியால் மீனவர்கள் பணி பாதிப்பு

சேதுபாவாசத்திரம், ஜூன் 21:   தஞ்சை மாவட்டத்தில் கடும் சூறாவளி காற்றால் 301 விசைப்படகுகளில் 40 படகுகள் மட்டுமே கடலுக்கு சென்றன நிறுத்தப்பட்டிருந்த படகுகள் கடலில் மூழ்கின.தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டிணம், கள்ளிவயல் தோட்டம் ஆகிய பகுதிகளில் சுமார் 301 விசைப்படகுகளும், சேதுபாவாசத்திரம் மற்றும் மல்லிப்பட்டிணம் ஆகிய இடங்களில் மீன்பிடி துறைமுகங்களும் உள்ளன. விசைப்படகுகள் புரிந்துணர்வு ஒப்பந்தப்படி நீங்கள், புதன், சனிக்கிழமைகளிலும்,

மற்ற தினங்களில் நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்வார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் தஞ்சை மாவட்ட கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசிவருகிறது. இதனால் மல்லிப்பட்டிணம் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு செல்ல வேண்டிய சுமார் 220 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் துறைமுகத்தில் நிறுத்தியுள்ளனர்.

அதே சமயம் சேதுபாவாசத்திரம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள சுமார் 81 விசைப்படகுகளில் 40 படகுகள் மட்டுமே கடலுக்கு சென்றன. மீன்வளத்துறை அனுமதி டோக்கன் வழங்கினாலும் ஆபத்தை கருத்தில் கொண்டு மீனவர்கள் தாமாகவே முன்வந்து கடலுக்கு செல்லவில்லை என மீனவர்கள் கூறுகின்றனர். காற்றின் வேகத்தில் மல்லிப்பட்டிணம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கள்ளிவயல்தோட்டத்தை சேர்ந்த பாலசுப்ரமணியன் (45), சுப்பிரமணியன் (48) ஆகியோருக்கு சொந்தமான விசைப்படகுகள் கடலில் மூழ்கியபடி நிற்கிறது. இதுபற்றி தமிழ்மாநில விசைப்படகு மீனவர் பேரவை மாநில செயலாளர் தாஜூதீன் கூறும்போது,வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கும் போதெல்லாம் தஞ்சை மாவட்ட கடல் பகுதி அமைதியாகவும் மீன்பிடி தொழில் செய்ய வசதியாகவும் உள்ளது. ஆனால் மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதி டோக்கன் வழங்க மறுக்கின்றனர். தற்போது எவ்வித எச்சரிக்கையுமின்றி அனுமதி டோக்கன் வழங்கப்படுகிறது. ஆனால் கடல் பகுதியில் 60 முதல் 80 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசுவதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் கடலில் மூழ்கியுள்ளது. மேலும் ஆபத்தை கருத்தில் கொண்டு கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை என்று கூறினார்.

Related Stories: