முதல்வர் அறிவித்தும் பயனில்லை மலட்டாற்றை தூர்வாருவதில் அதிகாரிகள் அலட்சியம்

பண்ருட்டி, ஜூன் 18: விழுப்புரம் மாவட்டம், ஏனாதிமங்கலம் கிராமத்தில் பெண்ணயாறு உள்ளது. இந்த ஆற்றின் அருகில்தான் கடலூர் மாவட்டத்திற்கு நீர் ஆதாரமாக விளங்கும் எல்லிஸ் அணைக்கட்டு கட்டப்பட்டு உள்ளது. இதன் பாசன பரப்பு 1444 ஹெக்டேர். கால்வாய் நீளம் சுமார் 8940 மீட்டர். பேரங்கியூர், அவியனூர், பைத்தாம்படி ஏ.பி.குப்பம் ஆகிய பல்வேறு ஏரிகளுக்கு நீர் ஆதாரமாக இந்த அணைக்கட்டு விளங்குகிறது. இந்த எல்லிஸ் அணைகட்டு மூலம் மழைகாலங்களில் தண்ணீர் திறந்துவிடும்போது அரசூர் வழியாக கடலூர் மாவட்டத்திற்கு வருகிறது. எல்லிஸ் அணைக்கட்டின் ஒரு பகுதியில் தனி ஷட்டர் அமைக்கப்பட்டு மலட்டாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

பெருவெள்ளம் காரணமாக மலட்டாறு உருவாகி சுமார் 550 அடி வரை மணல் பாங்கானதாக இருந்து வருகிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று குடிநீர் பிரச்னைகளுக்கும் ஆதாரமாக விளங்குகிறது. ஆண்டுதோறும் இந்த ஆற்றின் வழியாக தண்ணீர் முழுமையாக சென்றடைந்தால் 5 ஆண்டிற்கு தண்ணீர் பஞ்சம் வராது. இந்த ஆறு விழுப்புரம் மற்றும் கடலூர் என இரு மாவட்ட எல்லையில் அமைந்துள்ளதால் இரு மாவட்ட ஆட்சியர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், நீர்பாசனத்துறை அதிகாரிகள் நீரை சேமிப்பது சம்பந்தமாக எந்தவித பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.

இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டம் ஆனத்தூர், சேந்தமங்கலம் மற்றும் கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை உள்ளிட்ட விவசாயிகள் இணைந்து மலட்டாறு ஜீவநதி சங்கம் என்ற அமைப்பை துவங்கி ஆற்றை தூர்வாரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். போதிய நிதி ஆதாரம் இல்லாததால் புதிய திட்ட மதிப்பீடு அறிக்கை தயாரித்து தமிழக அரசிற்கு அனுப்பினர். ஆனால் அரசு கண்டுகொள்ளவில்லை.  விவசாயிகள், பொதுமக்கள் உதவியோடு ஆங்காங்கே கரையை பலப்படுத்தி 10% மட்டுமே தண்ணீர் வரவழைக்க முடிந்தது. அப்போது வெள்ள மீட்பு குழு தலைவர் ககன்தீப்சிங்பேடி ஆய்வு செய்து நிரந்தரமான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதன் விளைவாக மலட்டாறு கால்வாயை ரூ.23 கோடி மதிப்பில் சீரமைப்பு செய்யப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மலட்டாறு முழுவதும் வாய்க்கால்களின் கரைகள் பெரும்பாலான இடங்களில் சேதமடைந்து உள்ளன. அரசூர் என்ற இடத்தில் வாய்க்காலையே காணவில்லை.அரசூருக்கு அடுத்த ஆனத்தூர், சேந்தமங்கலம், ரெட்டிகுப்பம், ஒறையூர், திருத்துறையூர், வரிஞ்சிபாக்கம் ஆகிய பகுதிகளில் வாய்க்கால்களின் கரைகளை அகலப்படுத்த வேண்டும். பெரும்பாலான இடங்களில் கான்கிரீட் கரைகள் அமைத்தால்தான் தண்ணீர் வீணாகாமல் பாசனத்திற்கு பயன்படும். இந்த ஆறு வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அதனை மாற்றி தமிழக அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும். தற்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் சிறுபாலங்கள் கட்ட வரும்போது வனத்துறை தடுக்கிறது.

எனவே பெண்ணையாற்றில் இருந்து மலட்டாறுக்கு புதிய வாய்க்கால் கடலூர் மாவட்டத்தில் அமைக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணராஜசாகர் அணையில் நீர் திறந்தபோது வந்த தண்ணீரைகூட சேமிக்க முடியாமல் வீணாக கடலில் சென்று கலந்தது.

 மலட்டாற்றை கண்காணிப்பதற்கு இரு மாவட்டங்களிலும் தனி அலுவலர்கள் நியமித்து அலுவலகம் திறக்க வேண்டும். தமிழக அரசு முனைப்பாக இருந்து பணத்தை வீணாக்காமல் நேரடி அதிகாரி நியமித்து பணிகளை தொடர வேண்டும். இல்லையெனில் ரூ.23 கோடியும் பாழாகிவிடும். தமிழக அரசும் மலட்டாறு ஜீவநதி சங்கமும் இணைந்து இந்த பணிகளை மேற்கொள்ளலாம். ஏனெனில் மலட்டாற்றில் முழுமையான சீரமைப்பு பணிகள் குறித்த முழு விவரங்கள் இந்த அமைப்பினரிடம்தான் உள்ளது.

 

கூட்டு நடவடிக்கை மூலம் செய்தால் எதிர்கால விவசாயத்திற்கும், கடலூர் மாவட்டத்திற்கும் நீர் ஆதாரமாக அமையும். மாவட்ட ஆட்சியரும் இவற்றை தொடர்ந்து கண்காணிப்பு செய்யலாம். பெண்ணை ஆற்றில் பல ஆண்டுகளாக மணல் கொள்ளையடிக்கப்பட்டதால் நீரை சேமிக்க முடியாமல் வறட்சி பகுதியாகவே காணப்படுகிறது. இதன் காரணமாக விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் இருந்து வருகின்றனர். ஆற்றின் கரையோரம் பனை மரங்கள் நட்டு கரைகளை பலப்படுத்தலாம் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: