பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கொடுமுடியில் குவிந்த தீர்த்த காவடி பக்தர்கள்

கொடுமுடி: பங்குனி உத்திர திருவிழாவையொட்டி தீர்த்தக்காவடி பக்தர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கொடுமுடியில் குவிந்து வருகின்றனர்.  பங்குனி மாதத்தில் நடைபெறும் உத்திர திருவிழாவில் முருக பக்தர்கள் விரதமிருந்து, காவி உடை அணிந்து, காவடி எடுத்து பாதயாத்திரையாக பழனிமலைக்கு சென்று முருகனை வழிபடுவர். தமிழகம் மட்டுமின்றி கர்நாடகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு கொடுமுடிக்கு வந்து தீர்த்த காவடி எடுத்து செல்வது பன்னெடுங்காலமாக வாடிக்கையாக உள்ளது.

சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் கொண்ட கோயில், தெற்கில் இருந்து வடக்கு நோக்கி வந்து கொடுமுடியில் இருந்து கிழக்கு நோக்கி திரும்பி செல்லும் காவிரி நதிக்கரையில் அமைந்துள்ளது சிறப்பாகும். இங்கு வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்டவைகளில் தங்கி உணவருந்தி ஓய்வெடுப்பர். அதைத்தொடந்து காவிரி நதியில் புனித நீராடி, தீர்த்தக்கலசம் எடுத்து பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிமலைக்கு செல்வர். அதன்படி, பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நேற்று கொடுமுடி காவிரி ஆற்றில் படித்துறை, வட்டக்கொம்மனை மற்றும் மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்று திரண்டனர்.

பின்னர், மேள தாளம் முழங்க கரகாட்டத்துடன் அரோகரா கோஷம் முழங்க  மகுடேஸ்வரர், வீரநாராயணப்பெருமாள் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பெரும்பாலான பக்தர்கள் பாத யாத்திரையாக பழனிக்கு புறப்பட்டு சென்றனர். மேலும், பலர் மாட்டு வண்டி, குதிரை வண்டி, கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் பழநிக்கு புறப்பட்டு சென்றனர். நீண்ட தூரம் செல்லும் மாடுகளுக்கு லாடம் அடிக்கப்பட்டது. மேலும் மகுடேஸ்வரர் கோயில் வளாகத்தில் குடிநீர் வசதி, பக்தர்கள் வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்ய தேவையான ஏற்பாடுகள் உள்ளிட்டவை செய்யப்பட்டிருந்தன.

நகரின் அனைத்து பகுதிகளிலும் சுத்திகரிப்பு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் பொது சுகாதார பணிகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் செய்திருந்தனர். கொடுமுடி நகருக்குள் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தடுப்புகள் அமைத்து கார், வேன், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்களை நகருக்கு வெளியே நிறுத்தி வைத்து போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: