பேரவையில் பேச அனுமதிக்கவில்லை என கூறி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு: நாகரிகமாக நடந்து கொள்ள சபாநாயகர் அப்பாவு அறிவுறுத்தல்

கள்ளக்குறிச்சி விஷசாராய பலி குறித்து அதிமுக உறுப்பினர்கள் நேற்றும் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டு, வெளிநடப்பு செய்தனர். தமிழக சட்டப்பேரவை நேற்று காலை 10 மணிக்குத் தொடங்கியது. பேரவைக்கு 2வது நாளாக அதிமுக உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். பேரவைத்தலைவர் அப்பாவு திருக்குறள் உரையை முடித்ததும் வினா-விடை நேரம் என்று அறிவித்தார். அப்போது எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷம் போட்டனர். அவர்களைப் பார்த்து கேள்வி நேரம் முடிந்ததும் அனுமதி தருகிறேன் அனைவரும் அமருங்கள் என்று சபாநாயகர் கூறினார். ஆனால், தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. பேரவைத்தலைவர் அனுமதி அளிக்காததால் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

அதைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் அப்பாவு கூறியதாவது: கேள்வி நேரம் என்பது மக்களுக்கான நேரம், இது முடிந்தவுடன் உங்களுக்கு (அதிமுக) தேவையான நேரம் தருகிறேன். அவற்றை இந்த அவையில் பதிவு செய்யலாம். நீங்கள் (எடப்பாடி பழனிசாமி) 4 ஆண்டுகள் முதல்வராக இருந்தவர். உங்களுக்கு எல்லாம் தெரியும். நினைத்த நேரத்தில் அவையில் எதுவும் பேச முடியாது. கேள்வி நேரத்தையும் ஒத்தி வைக்க முடியாது. கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்றால் மசோதா கொண்டு வாருங்கள். விதியில் திருத்தம் செய்யலாம். உங்களுக்கு ஏதோ ெநருக்கடி உள்ளது. உங்கள் நெருக்கடியை தீர்க்கும் இடம் இதுவல்ல. இது மக்கள் பிரச்னையை பேசும் இடம். தொடர்ந்து வேண்டுமென்றே இதுபோன்ற பிரச்னைகளை ஏற்படுத்தி இந்த அவைக்கு குந்தகம் ஏற்படுத்துவது முறையல்ல.

இதுபோன்று நடப்பது ஏற்புடையது அல்ல. அவர்கள் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும். இதுபோன்று தொடர்ந்து நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும். கடந்த 2016-ம் ஆண்டில் அப்போதைய சபாநாயகர் ஒரு விதியை கொண்டு வந்தார். அதில் கேள்வி நேரம் முடிந்தவுடன், நேரமில்லா நேரத்தில் பிரச்னைகள் குறித்து பேச அனுமதி தந்தார். இப்போதும் நான் அனுமதி தருகிறேன். அப்போது நீங்கள் பேச வேண்டியதை பேசலாம் என்றார். அதிமுக ஆட்சிக் காலத்தில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது சபாநாயகர் கொண்டு வந்த விதியை ஏற்றுக் கொண்டனர். எனவே, பிரதான எதிர்க்கட்சியினர் இந்த விஷயத்தில் நியாயமான முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்று அப்பாவு கூறினார்.

The post பேரவையில் பேச அனுமதிக்கவில்லை என கூறி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு: நாகரிகமாக நடந்து கொள்ள சபாநாயகர் அப்பாவு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: