தாராபுரம் நகராட்சியை காணவில்லை: வரைபட கோப்புகள் மாயம்-நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசார விவாதம்

தாராபுரம் : தாராபுரம் நகர்மன்றத்தின் மாதாந்திர உறுப்பினர்கள் கூட்டம் நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன் தலைமையில் நகராட்சி ஆணையாளர் ராமர் நகர் மன்ற துணைத் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது, நகராட்சியின் அனைத்து துறை அலுவலர்கள் 30 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:

கமலக்கண்ணன்(திமுக): பஜனை மடத் தெரு என்ஜிஓ காலனி அடங்கிய எனது பகுதியில் கழிவு நீர் கால்வாய்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இப்பகுதி வழியாகத்தான் செல்கிறது. இந்த கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டால் அதை சுத்தம் செய்ய யாரும் வருவதில்லை.எனது சொந்தச் செலவில் மண்வெட்டி குப்பை என்னும் குடைகள் இவை எல்லாம் வாங்கிக் கொடுத்தும், எனது வார்டை சுத்தம் செய்ய வர மறுக்கிறார்கள்.

மேலும் தற்போதைய புதிய நகராட்சி கட்டிடம் அமைந்துள்ள பூங்கா சாலை பகுதியை சுற்றிலும் ஒரு கி.மீ சுற்றளவுக்கு புதிய கட்டிடங்கள் கட்ட வரைபட நகல் மற்றும் அனுமதி கோரி ஏராளமான பொதுமக்கள் நகராட்சியை அணுகி வருகின்றனர். ஆனால் நகராட்சி அலுவலகம் அமைந்துள்ள இடத்தை குறிப்பிட்டு காட்டும் டிடி 14ம் எண் நகர

அமைப்பு பிளான் தாராபுரம் நகராட்சியில் இல்லை.

அதனால் தாராபுரம் நகராட்சி எந்த இடத்தில் இருக்கிறது என்று தாராபுரம் நகரின் வரைபடத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை. நகராட்சியை காணவில்லை. புதிய வரைபட நகல் கேட்டு சேலத்தில் உள்ள டிடிசிபி நகர்ப்புற ஊர் புற முழுமை திட்ட அலுவலகத்திற்கு தாராபுரம் நகராட்சி நிர்வாகம் பலமுறை கடிதம் அனுப்பியும், இன்றுவரை நகராட்சிக்கான வரைபட நகல் பிடிசிபி அலுவலகத்தில் இருந்து அனுப்பப்படவில்லை.

இந்த காரணத்தினால் புதிய வீடுகள் வாங்கி கட்டுவோர் இடங்களை வாங்கி கட்டுவோர் கட்டுமான அனுமதிக்கு விண்ணப்பித்து நகராட்சியை அணுகினால் அவர்கள் அனைவருமே கடந்த இரண்டு ஆண்டுகளாக திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள். எனவே விரைவாக நகராட்சியின் டிடி நம்பர் 14 எண்ணுக்குரிய அலுவலக வரைபடத்தை வாங்க நகராட்சி நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் இந்த வரைபடத்தில் தான் தற்போது கட்டப்பட்டுள்ள இந்த புதிய நகராட்சி கட்டிடம் கூட எந்த இடத்தில் உள்ளது என கண்டுபிடிக்க முடியும். அது இல்லை என்றால் நகராட்சியை காணவில்லை என்று தானே அர்த்தம்.

மேலும் கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பப்படும் இட்டிலி, தோசை மாவுகளில் புழுக்கள் உற்பத்தியாவதாக இல்லத்தரசிகளான பெண்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.பாப்பு கண்ணன்(தலைவர்): உங்கள் வார்டுகளில் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யாதது  குறித்து விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுப்போம் மேலும் இட்லி தோசை மாவுகளில் சுகாதார சீர்கேடு குறித்து அதற்கான துறைக்கு பரிந்துரை செய்யலாம்.

புனிதா சக்திவேல்(திமுக): எனது வார்டின் பல பகுதிகளில் சாக்கடை அடைப்புகளை எடுப்பதே இல்லை. தாராபுரம் சர்ச் சாலையில் அலோசியஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வரை கடந்த ஒரு மாதமாக கழிவுநீர் தேங்கி சாலையில் வழிந்து ஓடுகிறது. இது பற்றி நகராட்சி ஊழியர்கள் மற்றும் மேஸ்திரிகளுக்கு புகாராக கூறினேன். அதற்கு அவர்கள் எங்கள் பகுதியில் நாங்கள் கோவில் பண்டிகை நடத்திக் கொண்டிருக்கிறோம். எனவே இப்போது வர இயலாது என்றனர்.பல்வேறு இனங்களைச் சார்ந்த பொதுமக்களுக்கும் துப்புரவு பணியாளர்களாக பணியாற்ற வாய்ப்பு கொடுத்தால் இது போன்று ஒரு பிரிவினரின் பண்டிகைக்காக ஊரையே சுத்தம் செய்யாமல் பொதுமக்கள் பாதிக்கும் நிலை ஏற்படாது என்றார்.

முகமது யூசுப்(7வது வார்டு):தாராபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் கடைக்காரர்களால் பாதை முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் வெளியில் சொல்ல முடியாத வேதனைகளை அனுபவித்து வருகிறார்கள். கொளுத்தும் வெயிலில் கூட அங்கு ஒதுங்கி நிற்க இடம் தர மறுக்கிறார்கள். இதே போல் தாராபுரம் பூக்கடை சந்திப்பு அருகே நகராட்சிக்கு சொந்தமான எட்டு கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளன.

இந்த எட்டு கடைகளில் தென்புறப் பகுதியில் இருந்து அதன் பின்புறம் உள்ள நல்லமநாயக்கன் பேட்டை வீதிக்கு செல்வதற்கான நகராட்சி சாலை ஒன்று பல ஆண்டுகளாக இருந்து வந்தது. இப்போது அந்த சாலையையே காணவில்லை. அதே இடத்தில் தனி நபர் ஒருவர் கடை கட்டி தானே வாடகை வசூலித்து வைத்துக் கொள்கிறார். அந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

இதே போல் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் உடுமலை சாலை பெரிய கடை வீதி உள்ளிட்ட பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என்றார்.

நாகராஜ்(அதிமுக): நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தாராபுரம் நகராட்சிக்கு 50 தெரு விளக்குகள் வர இருப்பதாக தகவல் கூறியுள்ளீர்கள். எனது வார்டில் தெருவிளக்குகள் எரிவதில்லை எனவே 50 தெருவிளக்குகளை எனது வார்டில் பொருத்தித் தர வேண்டும் என்றார்.

இதற்கு ஆட்சேபனை தெரிவித்த திமுக உறுப்பினர்கள் அதிமுக உறுப்பினர் பேசுவதை கண்டித்து தங்களது மேசைகளை தட்டி ஒலி எழுப்பினர்.நகராட்சிக்கு வரும் 50 தெரு விளக்குகளையும் உங்கள் பகுதிக்கே போட்டு விட மற்ற பகுதிகள் எல்லாம் அங்கு வசிக்கும் மக்கள் எல்லாம் எங்கே போவார்கள். அவர்களுக்கு நாங்கள் என்ன பதில் சொல்வது. முதலில் முதலில் உங்கள் பகுதியில் நிறுவப்பட்டல்ல மின் கம்பத்தில் எத்தனாவது எண் கொண்ட மின்கம்பத்தில் விளக்கு எரியவில்லை என கம்பத்தின் நம்பர்களை உங்களுக்கு தெரிந்தால் கூறுங்கள்.

அதற்குப் பிறகு அங்கு மின்விளக்கு பொருத்தலாமா வேண்டாமா என முடிவெடுக்கலாம் என நகர்மன்ற கவுன்சிலர்கள் முருகானந்தம் சந்திரசேகர் ஆகியோர் எதிர் கேள்வி எழுப்பினர்.

செல்லின் பிலோமினா(திமுக): தாராபுரம் நகராட்சி நூற்றாண்டுகளைக் கடந்த பழமையான நகராட்சியாக இதுவரை செயல்பட்டு வந்தது தேர்வு நிலை நகராட்சியாக இருந்த இதை சிறப்பு முதல் நிலை நகராட்சியாக அறிவித்த தமிழக முதலமைச்சர் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

முருகானந்தம்(திமுக): அதிமுக வார்டு உறுப்பினரான நாகராஜ் தனது கட்சி பொதுக் கூட்டத்தில் பேசுவதைப் போல நகர் மன்ற கூட்டத்தில் வந்து பேசுவதை அனைத்து திமுக உறுப்பினர்களும் கண்டிக்கிறோம்.வரும் காலத்தில் நகராட்சி அவரது வார்டு பொதுமக்கள் பிரச்னைகளை மட்டுமே பேச வேண்டுமே தவிர அரசியல் பேசக்கூடாது.  என்றார். மேற்கண்டவாறு நகர்மன்ற கூட்டத்தில் காரசார விவாதங்கள் நடந்தன.

Related Stories: