99 டிகிரி வெப்பம் பதிவு; தென் மாவட்டங்களில் அதிகரிக்கும் கோடை வெயில்: காற்றாலை மின் உற்பத்தியும் இறங்குமுகம்

நெல்லை:  நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கோடை வெயில் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக 99 டிகிரி வெப்பம் பதிவானது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பு அளவு பெய்யாத நிலையில், அதன் பின்னரும் பெரியளவு மழை பெய்யவில்லை. இந்த நிலையில் தற்போது கோடை வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பகல் நேர வெப்ப பதிவு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நெல்லையில் நேற்று அதிகபட்ச வெப்ப பதிவு 99 டிகிரியாக உயர்ந்தது.

3 தென் மாவட்டங்களிலும் வெயில் தாக்கம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் இரவிலும் புழுக்கம் அதிகமாக உணரப்படுகிறது. வெயில் காரணமாக குளிர்பானங்கள் விற்பனை ஜோராக நடக்கிறது. வழக்கத்தை விட அதிகளவிலான சாலையோர இளநீர், நுங்கு, பதனீர், கரும்புச்சாறு, நீர் மோர் உள்ளிட்ட தற்காலிக குளிர்பான கடைகள் அதிகளவில் தோன்றி உள்ளன. மின்விசிறி, ஏசி, ரெப்ரிஷிரேட்டர் போன்ற மின்சாதனங்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. வெயில் தாக்கம் அதிகரிக்கும் அதே நேரத்தில் காற்றின் வேகம் குறைந்துள்ளது. காற்றின் ஈரப்பத அளவும் குறைந்துள்ளது.

காற்று குறைந்துள்ளதால், காற்றாலை மின் உற்பத்தியும் இறங்குமுகமாக உள்ளது. தொடர்ந்து வெப்பதாக்கம் அதிகரிக்கும் நிலையில் அணைகளின் நீர் மட்டம் இறங்கிவருகிறது. நெல்லை மாவட்டத்தின் முக்கிய அணையான பாபநாசம் அணை நீர் இருப்பு 21.80 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு

71 கனஅடிநீர் மட்டுமே வருகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக 100 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சேர்வலாறு அணை நீர் இருப்பு 43 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர் இருப்பு 79 அடியாகவும் குறைந்துள்ளது. மணிமுத்தாறு அணையில் இருந்து 105 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

வடக்கு பச்சையாறு அணை நீர் இருப்பு 6.75 அடியாக குறைந்துள்ளது. கொடுமுடியாறு அணையில் 9 அடி நீர் இருப்பு உள்ளது. இதுபோல் தென்காசி மாவட்ட அணைகளின் நீர் இருப்பும் குறைந்து வருகிறது. கடனா அணை நீர் இருப்பு 35.40 அடியாக உள்ளது. ராமநதியில் 34 அடியும், கருப்பாநதியில் 24 அடியும், குண்டாறில் 16 அடியும் நீர் இருப்பு உள்ளது. அடவிநயினார் அணையில் 10 அடி நீர் இருப்பு உள்ளது. வெயில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் 3 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. ஏப்ரல், மே மாதங்களில் வெயில் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

குறிப்பாக கோடை வெயிலின் உச்சமாக கருதப்படும் மே மாதம் 25 நாட்கள் தொடர்ந்து கத்திரிவெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அம்பை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நேற்று மாலை கோடை மழை பெய்து அப்பகுதி மக்களை ஆறுதலடையச்செய்தது.

Related Stories: