சிவகாசி - திருத்தங்கல் சாலையோரம் உள்ள பட்டுப்போன மரத்தை அகற்ற வேண்டும்: வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

சிவகாசி: சிவகாசி - திருத்தங்கல் சாலையோரத்தில் உள்ள 60 அடி உயர பட்டுபோன மரத்தை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். சிவகாசியிலிருந்து திருத்தங்கல்வரை 3 கி.மீ தூர சாலை உள்ளது. இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான கனரக, இலகுரக வாகனங்கள், டூவீலர்கள் இரு மார்க்கமாக சென்று வருகின்றன. இந்த சாலை வழியாகவே விருதுநகர், மதுரை செல்ல வேண்டியிருப்பதால் எப்போதும் இது பரபரப்பாகவே காணப்படும். குறிப்பாக பீக்அவர் என கூறப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில் வாகனங்களில் செல்வோர் ஒருவரையொருவர் முண்டியடித்துக் கொண்டு பயணிப்பர்.

இந்த சாலையில் உள்ள ஒரு பர்னிச்சர் கடை முன்பாக சுமார் 80 ஆண்டுகள் பழமையான புளிய மரம் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இம்மரம் முழுமையாக பட்டுப்போனது. சுமார் 60 அடிவரை உயரம் கொண்ட இந்த மரம், பலத்த காற்று மற்றும் மழையால் உடைந்து விழும் அபாயம் உள்ளது. மேலும் தற்போது மரத்தில் இருக்கும் காய்ந்து போன கிளைகள் உடைந்து சாலையில் செல்லும் வாகனங்கள் மீது அடிக்கடி விழுகின்றன. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி காயமடைந்து வருகின்றனர்.

எனவே பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள இந்த பட்டுப்போன மரத்தை முழுமையாக வெட்டி அகற்றுமாறு, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகின்றது. மரம் விழுந்து விபத்து ஏற்படுவதற்கு முன், அதை முழுயாக வெட்டி அகற்ற நெடுஞ்சாலைதுறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: