கட்டவாக்கம் ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம்: உத்திரமேரூர் எம்எல்ஏ திறந்து வைத்தார்

வாலாஜாபாத்:  வாலாஜாபாத் ஒன்றியம், கட்டவாக்கம் ஊராட்சியில் 2000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மிகவும் பழமையான நிலையில் பயன்படுத்த முடியாத சூழல் நிலவியது. இதனால், இந்த ஊராட்சி மன்ற அலுவலகம் பிள்ளையார் குப்பம் சாலை பகுதியில் செயல்பட்டு வந்தது. இதனால், கிராம மக்கள் நீண்ட தூரம் சென்று தங்களின் தேவைகளை பூர்த்தி செய்வது கடினமாக இருந்ததால், இப்பகுதியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம், பழமையான நிலையில் சிதலமடைந்து காணப்படும் அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து உள்ளாட்சி பிரதிநிதிகளிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் வலியுறுத்தி வந்தனர்.

அதன் அடிப்படையில், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ், நிதி ஒதுக்கப்பட்டு புதியதாக அங்கன்வாடி மைய கட்டிடம், ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் நெல் கொள்முதல் நிலையம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டு அதற்கான திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு, ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன் தலைமை தாங்கினார். இதில், உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் கலந்து கொண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், ரூ.10.19 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம், ரூ.22.50 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் மற்றும் விவசாயிகள் தங்கள் அறுவடை செய்த நூல்களை நேரடி அரசு நெல் கொள்முதல் நிலையம் ஆகியவற்றை திறந்து வைத்து, கிராம மக்களிடையே குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது, கிராமமக்கள் கட்டவாக்கம் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை வேண்டும் என வலியுறுத்தினர். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய குழு துணை தலைவர் சேகர், ஒன்றிய கவுன்சிலர் சஞ்சய்காந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்து சுந்தரம், ராஜ்குமார், ஊராட்சி மன்ற தலைவர் அஞ்சலம்அருள், துணை தலைவர் வெங்கடேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நரசிம்மன், திமுக ஒன்றிய நிர்வாகிகள், கிராமமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: