11 நாள் நடந்த ஆவடி புத்தகத் திருவிழாவில் ரூ.1 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்

ஆவடி: கடந்த 11 நாட்களாக நடந்த ஆவடி புத்தகத் திருவிழாவில் ரூ.1 கோடிக்கு புத்தகங்கள் விற்பனையானது என்று கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். ஆவடி எச்.வி.எப். மைதானத்தில் கடந்த 11 நாட்களாக நடைபெற்ற முதலாவது ஆவடி புத்தகத் திருவிழா நேற்று முன்தினம் நிறைவுற்றது. இதில் நடைபெற்ற புகைப்படக் கண்காட்சி மற்றும் பல்துறை பணிவிளக்க கண்காட்சியில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை ஏற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: ஆவடியில் முதன் முறையாக புத்தகத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்தபோது, மக்கள் எந்த அளவுக்கு கூடுவார்கள், எத்தனை புத்தகங்கள் விற்பனை ஆகும் உள்ளிட்ட பல சந்தேகங்கள் இருந்தது. ஆனால் இந்த புத்தக திருவிழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சியில், திருவள்ளூரில் நடைபெற்ற புத்தக திருவிழாவைவிட சிறப்பாகவும், வெற்றிகரமாகவும், மக்களின் பங்களிப்பு மகிழ்ச்சியாக இருந்தது.

கடந்த 11 நாளில், ஆவடி புத்தகத் திருவிழாவில் ஒரு கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையானது. பல்வேறு சங்கத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள் இந்த கண்காட்சியில் புத்தகங்களை வாங்கியுள்ளனர். கிராமப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நன்கொடையாக அளிப்பதற்கும், நகராட்சிகள், பேரூராட்சிகள் இங்கு புத்தகங்களை கொள்முதல் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி மாவட்ட நிர்வாகம் சார்பாக இங்கு வந்த அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் ரூ.20 மதிப்பிலான கூப்பன் இலவசமாக வழங்கப்பட்டது. இதனால் 3 மாணவர்கள் சேர்ந்து பெரிய புத்தகங்களை வாங்கியுள்ளனர்.

இது மாவட்ட நிர்வாகத்தைச் சேர்ந்த ஒரு முன் மாதிரியான முயற்சியாகும். அமைச்சர் நாசர் அனைத்து நாட்களுமே வருகை தந்துள்ளார். அவர் வருகை தந்த அனைத்து நாட்களுமே மக்களின் பங்களிப்பு குறித்து அறிந்து கொண்டார். இந்த ஆவடி புத்தகத் திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்கும், ஒரு வழிகாட்டியாகவும் அமைச்சர் இருந்துள்ளார். ஆவடி மாநகராட்சி மேயர், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் ஒற்றுமையுடன் பணியாற்றியது மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஆவடி காவல் ஆணையரகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கும் மிக்க நன்றியினை தெரிவித்து கொள்கிறேன். புத்தகத்தை வாசிப்போம், புத்தகத்தை நேசிப்போம் என்பதே இந்த புத்தகத் திருவிழாவின் நோக்கமாகும். இவ்வாறு பேசினார்.

முன்னதாக கண்மணி குணசேகரன் கருத்துரை வழங்கினார். கடந்த 11 நாட்கள் நடந்த இந்த புத்தகத் திருவிழாவில் சுமார் 82,000 வாசிப்பாளர்கள் வந்து பயனடைந்தனர். இந்நிகழ்வுகளில், ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்பகராஜ், மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் மலர்விழி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எபினேசன், அரசு அலுவலர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

* கண்காட்சியில் சிறந்த நாய் பராமரிப்பாளருக்கு சான்றிதழ்

புத்தக கண்காட்சியின் ஒரு பகுதியாக கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பாக நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாபு அனைவரையும் வரவேற்றார். இந்நிலையில் நான்கு பிரிவுகளாக நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இந்த நாய்கள் கண்காட்சியில் சிறந்த முறையில் நாய்களை பராமரித்து வரும் உரிமையாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

Related Stories: