நாலுகோட்டை காட்டுப் பகுதியில் பெருங்கற்கால கல்வட்டம் கண்டுபிடிப்பு-தொல்லியல் துறை ஆய்வு நடத்த கோரிக்கை

சிவகங்கை : சிவகங்கை அருகே நாலுகோட்டை பகுதியில் பெருங்கற்கால கல்வட்டங்கள், கற்பதுக்கை எச்சங்கள், கற்காலக்கருவி கண்டுபிடிக்கப்பட்டன.சிவகங்கை அருகே நாலுகோட்டை காட்டுப் பகுதியில் பரவலாக கற்கள் காணப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் காளிராசா, நிர்வாகிகள் சுந்தரராஜன், நரசிம்மன் ஆகியோர் அங்கு ஆய்வு செய்தனர். ஆய்வு குறித்து அவர்கள் தெரிவித்ததாவது:

நாலுகோட்டையில் இருந்து பேரணிப்பட்டிக்குச் செல்லும் சாலையில் வெட்டிக்கினத்தான் மேட்டுப் பகுதியில் 20க்கும் மேற்பட்ட பெருங்கற்கால ஈமச்சின்னமான கல்வட்டங்கள் பெரிதும் சிதைவுறாமல் உள்ளன. பெருங்கற்காலங்களில் பெரிய பெரிய கற்களை வட்டமாக அடுக்கி வைத்து அதன் உள்பகுதியில் இறந்தவர்களை அல்லது அவர்களது எலும்பு மற்றும் அவர்கள் பயன்படுத்திய பொருள்களை வைத்து புதைப்பது வழக்கமாக இருந்திருக்கிறது.

இவை 3,500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம். வட்டமாக பெருங்கற்களை அடுக்கி நினைவுச் சின்னங்கள் எழுப்பி இருந்தாலும் நடுவில் முதுமக்கள் தாழியை வைத்து புதைக்கும் வழக்கமும் பெருவாரியாக இருந்துள்ளன. இவை காலத்தால் பிந்தையதாக இருக்கலாம். அதற்கு முன்னால் இக்கல்வட்டங்களுக்கு உள்ளேயே கற்களால் செவ்வக வடிவில் பெட்டி போன்ற அமைப்பில் கற்பதுக்கைகள் அமைக்கும் வழக்கம் இருந்திருக்கலாம். அவ்வாறான எச்சத்தை இக்கல்வட்டங்களில் காண முடிகிறது.

கல்வட்டங்களில் ஒன்றில் மட்டும் இரண்டு அடுக்காக காணப்படுகிறது. இது மற்ற கல்வட்டங்களில் இருந்து வேறுபட்டு இருப்பதால் அப்பகுதியில் வாழ்ந்தவர்களில் தலைமையானவருக்காக இந்த கல்வட்டம் இருக்க வாய்ப்புள்ளது. இங்கு இரும்பு உருக்கு எச்ச கழிவுகளையும், இரும்பு போன்ற கற்களையும் காணமுடிகிறது. 4,200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர்களிடம் இரும்பு பயன்பாடு இருந்ததை ஐங்குன்றம் மயிலாடும்பாறை அகழாய்வு உறுதிப்படுத்தி உள்ளது. கற்கால கருவி ஒன்றும் கிடைத்துள்ளது.

இது இரண்டு பக்கங்களிலும் துளை உடையதாக உள்ளது. மேலும் கருவியின் சுற்றுப்பகுதிகள் நன்கு பயன்படுத்தப்பட்டு தேய்ந்து உள்ளதை காணமுடிகிறது. இக்கருவி சுத்தியல் போல உடைப்பதற்காகவோ, வேட்டை விலங்குகளை நுட்பமாக எறிவதற்காகவோ பயன்படுத்தப்பட்டிருக்கலாம். மேலும் இதே போன்ற வடிவிலான கருவி வேலூர் மாவட்டம் வலசை கிராமத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் கிடைத்துள்ளது. நாலுகோட்டை பகுதியில் தொல்லியல் துறை ஆய்வு நடத்த வேண்டும் என வலியுறுத்துவோம். இவ்வாறு தெரிவித்தனர்.

Related Stories: