வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் இணைப்பு சாலை பழுது

*வாகன ஓட்டிகள் அவதி: சீரமைக்க கோரிக்கை

புவனகிரி : கிள்ளை அருகே பொன்னந்திட்டில் இருந்து வெள்ளாற்று பாலத்தை இணைக்கும் இணைப்புச் சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் அமைந்துள்ளது கிள்ளை மற்றும் பரங்கிப்பேட்டை பேரூராட்சி. இந்த 2 பேரூராட்சிகளுக்கும் இடையில் வெள்ளாறு ஓடி கடலில் கலக்கிறது. கடல் முகத்துவாரத்திற்கு அருகே வெள்ளாற்றின் குறுக்கே சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. அதுவரை படகு மூலமே சென்று வந்த மக்கள் பாலம் கட்டப்பட்ட பிறகு எளிதாக கிள்ளை மற்றும் பரங்கிப்பேட்டை பகுதிகளுக்கு சென்று வந்தனர். அதன் பின்னர் இந்த வழியாக கடலூருக்கு அரசு பேருந்தும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாகவே கிள்ளை அருகே உள்ள பொன்னந்திட்டில் இருந்து வெள்ளாற்று பாலத்தை இணைக்கும் இணைப்புச் சாலை மிகவும் மோசமடைந்து போக்குவரத்திற்கே தகுதியற்ற நிலையில் உள்ளது. அரசுப் பேருந்து செல்வது மட்டுமல்லாது, பல்வேறு பள்ளி, கல்லூரி வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள், கார், லாரி போன்ற பல்வேறு வாகனங்களும் செல்கின்றன. இதுதவிர பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் மற்றும் முடசல் ஓடை பகுதிகளில் பிடிக்கப்படும் மீன்கள் அனைத்தும் லாரிகளில் ஏற்றப்பட்டு இந்த பாலத்தின் வழியாகத்தான் எடுத்துச் செல்லப்படுகிறது. இதனால் தினமும் இந்த வெள்ளாற்று பாலத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பொன்னந்திட்டில் இருந்து வெள்ளாற்று பாலத்தை இணைக்கும் இணைப்பு சாலை சிதம்பரம் உட்கோட்ட நெடுஞ்சாலைத்துறையின் கீழ் வருகிறது. இந்த சாலையை சீரமைக்க வேண்டுமென கிள்ளை, சிங்காரகுப்பம், முழுக்குத்துறை, முடசல்ஓடை, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அரசுக்கு மனு அளித்துள்ளனர். ஆனாலும் பல ஆண்டுகளாக இந்த இணைப்பு சாலை சீரமைக்கப்படாமலேயே உள்ளது.

பொன்னந்திட்டில் இருந்து வெள்ளாற்று பாலம் வரை 438 மீட்டர் தூரத்திற்கு இணைப்பு சாலை அமைக்கப்பட வேண்டும். 7 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட வேண்டிய இந்த சாலைக்காக சுமார் ரூ.68 லட்சம் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அரசு அனுமதி அளித்து நிதி ஒதுக்காததால் இந்தப் பாலத்தின் இணைப்புச்சாலை சீரமைக்கப்படாமலேயே உள்ளது. முற்றிலும் சேதமடைந்து, சாலையே இல்லாமல் மண் தரையைப்போல் இந்த சாலை காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.  

இதுகுறித்து கிள்ளை பேரூராட்சி துணை தலைவர் தில்லை ரவீந்திரன் கூறுகையில், கிள்ளை பேரூராட்சியின் பல்வேறு பகுதிகளில் இருந்து பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், கடலூர் போன்ற பகுதிகளுக்கு செல்ல இந்த பாலத்தின் வழியாகத்தான் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சென்று வருகின்றனர். பல ஆண்டுகளாகவே இந்த பாலத்தை இணைக்கும் சாலை சீரமைக்கப்படாமல் இருக்கிறது.

இந்த பாலத்தின் சாலை நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் வந்தாலும், பொதுமக்கள் அனைவரும் பேரூராட்சி நிர்வாகத்திடமே சாலையை சீரமைக்ககோரி மனு அளிக்கின்றனர். சாலை பேரூராட்சி கட்டுப்பாட்டில் வராததால் பேரூராட்சி நிர்வாகத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பாலத்தின் இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Related Stories: