காலை சிற்றுண்டி திட்டம் ஈரோடு மாநகராட்சியில் கூடுதலாக 32 பள்ளிகளில் இன்று முதல் அமல்..!!

ஈரோடு: காலை சிற்றுண்டி திட்டம் ஈரோடு மாநகராட்சியில் கூடுதலாக 32 பள்ளிகளில் இன்று முதல் அமலுக்கு வந்தது. ஏற்கனவே ஈரோடு மாநகராட்சியில் 28 பள்ளிகளில் 2,649 மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வந்தது. இன்று முதல் கூடுதலாக 32 பள்ளிகளில் 5,793 மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மொத்தமாக 96 பள்ளிகளைச் சேர்ந்த 9,180 மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள காலை சிற்றுண்டி திட்டம் பள்ளி குழந்தைகளிடமும் பெற்றோர்களிடமும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. ரவா உப்புமா, சேமியா உப்புமா, அரிசி உப்புமா, கோதுமை ரவா உப்புமா, ரவா காய்கறி கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா காய்கறி கிச்சடி, ரவா பொங்கல், வெண்பொங்கல், ரவா கேசரி, சேமியா கேசரி என மிக நீளமான உணவுப் பட்டியலை குழந்தைகளின் காலை சிற்றுண்டிகாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. காலம் காலமாக கல்வி மறுக்கப்பட்ட குழந்தைகளை பள்ளிக்கு வரவழைத்து உணவளித்து கல்வியையும் முன்னேற்றத்தையும் வழங்கும் திராவிட இயக்கத்தின் சமூக நீதி பயணத்தில் காலை சிற்றுண்டி திட்டம் புதிய மைக்கல் என்றால் அது மிகையல்ல.

Related Stories: