போக்குவரத்து நெரிசலை குறைக்க ஊத்துக்கோட்டை பஜாரில் கயிறு மூலம் தடுப்பு: போலீசார் அதிரடி

ஊத்துக்கோட்டை:  ஊத்துக்கோட்டை பஜாரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசார் கயிறு மூலம் தடுப்பு ஏற்படுத்தியுள்ளனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இது சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் உள்ளது. இதனால் இந்த பகுதி வழியாக சென்னையிலிருந்து ஆந்திர மாநிலம் திருப்பதி, ரேணிகுண்டா, கடப்பா ஆகிய பகுதிகளுக்கும், இதுபோல் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு பஸ் மற்றும் கனரக வாகனங்களும் ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கில் செல்கிறது. இதனால் நான்குமுனை சந்திப்பில் உள்ள அண்ணாசிலை பகுதியில் இருந்து பஜார் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.  

இதுகுறித்து பொதுமக்கள் சார்பில் முதல்வரின் தனிப்பிரிவுக்கும், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்பிக்கு  புகார்கள் சென்றது. அதன் அடிப்படையில் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி கணேஷ்குமார் தலைமையில் போக்குவரத்து சப்- இன்ஸ்பெக்டர் கங்காதரன் மற்றும் போலீசார் ஊத்துக்கோட்டை 4 முனை சந்திப்பில் இருந்து நேரு பஜார், திருவள்ளூர் சாலை, நாகலாபுரம் சாலை, சத்தியவேடு ஆகிய 4 சாலைகளிலும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சீர்செய்ய கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆலோசனை செய்தனர். அதன்படி நேற்று ஊத்துக்கோட்டை 4 முனை சந்திப்பில் இருந்து சென்னை, திருவள்ளுர், நாகலாபுரம், சத்தியவேடு ஆகிய 4 சாலைகளின் ஓரங்களில் கயிறுகளை சாலையில் பதித்து தடுப்புகள் ஏற்படுத்தினர்.  

இதையும் மீறி வாகனங்களை சாலையில் நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இது குறித்து போலிசார் கூறியதாவது:  ஊத்துக்கோட்டையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் சாலை ஓர கடைகள் ஆகும். கடைகளுக்கு பொருட்கள் வாங்க வருபவர்கள் சாலையிலேயே பைக்கை நிறுத்துகிறார்கள்.  இந்த போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சாலை ஓரங்களில் கயிறுகள் எல்லைக்கோடுபோல் அமைக்கப்பட்டுள்ளது. எனவே இனிமேல்  கயிறுக்கு உள்ளே தான் வாகனங்களை நிறுத்த வேண்டும். விதிகளை மீறி சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூராக வாகனங்களை நிறுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என போலீசார் எச்சரித்தனர்.

Related Stories: