திருவில்லிபுத்தூர்: ஆள் கடத்தல் மற்றும் கொலை மிரட்டல் தொடர்பான வழக்கில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்றைக்கு ஒத்தி வைத்து, திருவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே மல்லியைச் சேர்ந்தவர் ராஜவர்மன் (52). சாத்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ. இவரும் நண்பர்கள் சிலரும் அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரது பட்டாசு ஆலையில் பங்குதாரர்களாக சேர்ந்தனர். பின்னர் விலகினர். ரவிச்சந்திரனும் அவர்களுக்கு உரிய பங்குத் தொகை கொடுத்தார்.
போலி ஆவணங்கள் மூலம் மீண்டும் பங்குத் தொகை கேட்டு கடந்த 2018ல் ரவிச்சந்திரனை கடத்தி விடுதியில் வைத்து அடித்து மிரட்டியதாகவும், இதற்கு கடந்த அதிமுக ஆட்சியின்போது திருவில்லிபுத்தூரில் பணியாற்றிய டிஎஸ்பி, ஒரு எஸ்ஐ உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ராஜவர்மன் உள்பட 3 பேர், ஒரு பெண், டிஎஸ்பி, ஒரு எஸ்ஐ ஆகிய 6 பேர் மீது திருவில்லிபுத்தூர் நகர் போலீசார் ஆள் கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன், தங்க முனியசாமி (30), ரவிச்சந்திரன் (53), அங்காள ஈஸ்வரி (50) ஆகியோர் முன்ஜாமீன் கோரி திருவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி கிறிஸ்டோபர், விசாரணையை இன்றைக்கு ஒத்தி வைத்தார்.