திருவாரூர் கோயிலில் ஏப். 1ல் ஆழித்தேரோட்டம்: 5 தேர்களுக்கு சீலைகள் பொருத்தும் பணி தீவிரம்

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் விழாக்களில் பங்குனி உத்திர விழாவானது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும் அதன் பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் உள்ள கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நடப்பாண்டில் ஆழித்தேரோட்ட விழா வரும் 1ம் தேதி நடைபெறுவதையொட்டி இதற்கான பந்தல்கால் முகூர்த்தம் கடந்த மாதம் 5ம் தேதி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மஹாத்துவஜா ரோகணம் எனும் கொடியேற்றம் நிகழ்ச்சி கடந்த 9ம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில் ஆழித்தேர் கட்டுமான பணி கடந்த 40 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது கட்டுமான பணிகள் அனைத்தும் முடிவுற்றுள்ளன. இதேபோல் ஆழித்தேருக்கு முன்னால் இயக்கப்படும் விநாயகர் மற்றும் சுப்ரமணியர் தேர்களும், ஆழித்தேருக்கு பின்னால் இயக்கப்படும் கமலாம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் தேர்களுக்குமான கட்டுமான பணிகள் முடிவுற்றுள்ள நிலையில் நேற்று ஆழித்தேர் உள்ளிட்ட 5 தேர்களுக்கும் தேர் சீலைகள் பொருத்தும் பணி நடைபெற்றது.

மேலும் ஆழித்தேரில் மரக்குதிரைகள் மற்றும் பொம்மைகள் உள்ளிட்டவை பொருத்தும் பணி வரும் நாட்களில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயிலின் உள்துறைகட்டளை பரம்பரைஅறங்காவலர் ராம்தியாகராஜன், உதவி ஆணையர்கள் மணவழகன் மற்றும் ராணி, செயல் அலுவலர் அழகியமணாளன் ஆகியோர் மேற்பார்வையில் அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: