மாநில அளவிலான சிலம்ப போட்டியில் மாணவிகள் சாதனை: திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி அசத்தல்

தமிழர்களின் வீரத்தின் அடையாளமாகவும், பண்பாட்டு சின்னமாகவும் கலாசார புதையலாகவும் சிலம்பம் விளங்குகிறது. கம்பு சுழலும் போது ஏற்படும் ஓசை மற்றும் ஆயுதங்கள் ஒன்றோடொன்று மோதும் ஓசை போன்ற காரணங்களால், தமிழரின் தற்காப்புக் கலைக்கு சிலம்பம் என்ற பெயர் ஏற்பட்டது. சிலம்பம் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது. 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகத்திய முனிவர் 64 கலைகளில் ஒன்றாக சிலம்பத்தை குறிப்பிடுகிறார். சிலம்பம் பற்றி தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக சிலப்பதிகாரத்தில் சிலம்பம் ஆடுவதற்கான கம்பு, கத்தி போன்றவை ஒரு கடையில் விற்கப்படுவதாகவும் அவற்றை வெளிநாட்டினர் மிக ஆர்வமுடன்

வாங்கிச் செல்வதாகவும் குறிப்புகள் உள்ளன.  திருக்குறளில் கோல் என்ற பெயரிலும், கலிங்கத்துப்பரணியில், வீசு தண்டிடை கூர்மழு ஒக்குமே என்ற வரிகள் மூலம், தண்டு என்ற பெயரிலும் கம்பு குறிப்பிடப்பட்டுள்ளது. திருவிளையாடற் புராணத்திலும், சிலம்ப விளையாட்டு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இந்த கலை தற்போது உலகளவில் பரவியுள்ளது. இந்த கலையை தற்போது பள்ளிகளில் மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பயின்று வருகிறார்கள். முறையான பயிற்சி பெற்று, மாநில அளவிலான பல போட்டிகளில் முதலிடம் பெற்று, சாதனைகளையும் புரிந்து வருகின்றனர். குறிப்பாக, மாணவிகள் இந்த சிலம்ப போட்டியில் அசத்தி வருகின்றனர்.

அதன்படி, திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சிலம்ப போட்டிகளில் சாதனை படைத்து வருகின்றனர். திருத்தணி அடுத்த ஆர்.வி.என் கண்டிகை கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தானாக முன்வந்து இந்த பள்ளி மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார். இதில், மாணவிகள் ஆர்வமுடன் சிலம்பம் பயின்று வருகின்றனர்.  இவ்வாறு பயிற்சி பெற்ற மாணவிகள் மாநில, மாவட்ட, ஒன்றிய அளவிலான போட்டிகள் பங்கேற்று வெற்றிகளை குவித்து வருகின்றனர். அதன்படி, சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டியில் இந்த பள்ளியின் பிளஸ் 2 மாணவி தனுஷா முதல் பரிசை வென்று, கோப்பையை கைப்பற்றினார். 10ம் வகுப்பு மாணவி ஆர்.ஹேம 2ம் பரிசையும், 10ம் வகுப்பு பயிலும் மற்றொரு மாணவி பவித்ரா, 9ம் வகுப்பு படிக்கும் சுப, ஸ்வேதா ஆகிய மாணவிகள் 3ம் பரிசுகளையும் வென்று வெற்றி கோப்பைகளை பெற்றுள்ளனர்.

* தனித்திறன் பயிற்சி பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், ‘‘இந்த  பள்ளியில் மாணவிகளுக்கு சிறந்த கல்வியுடன், தனித்திறன் பயிற்சிகள்  அளிக்கப்படுகிறது. இங்கு படித்த மாணவிகள் அரசு துறைகளில், வர்த்தகம்,  பொறியியல், மருத்துவம், கலவியாளர்கள் என பல்வேறு துறைகளில் சாதித்து  வருகின்றனர். மாணவிகள் முறையாக பயிற்சி பெற்று மேலும் பல சாதனைகளை படைக்க  அரசு உறுதுணையாக உள்ளது. எங்கள் பள்ளி மாணவிகள் மேலும் பல சாதனைகள்  படைப்பார்கள்,’’ என்றனர்.

Related Stories: