அனைத்து மொழி பேசும் மக்களையும் அரவணைக்கும் மாநிலம் தமிழ்நாடு: நெல்லையில் குஜராத் மாநில அமைச்சர் புகழாரம்

நெல்லை: மிகவும்  சிறப்பான மற்றும்   அமைதியான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. அனைத்து மொழி பேசும் மக்களையும் அரவணைக்கும் மாநிலமாக உள்ளது என்று நெல்லையில் குஜராத் மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ருஷிகேஷ் கணேஷ்பாய் படேல் தெரிவித்தார். `சவுராஷ்டிரா தமிழ் சங்கமம்  நிகழ்ச்சி’  குஜராத்தில் வரும் ஏப்.17ம் தேதி   தொடங்கி  30ம் தேதி வரை நடக்கிறது.  இதுதொடர்பான சிறப்பு அழைப்பு  நிகழ்ச்சி, நெல்லையில்  நடந்தது. இதில் குஜராத் மாநில  சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை  அமைச்சர் ருஷிகேஷ் கணேஷ்பாய் படேல் பங்கேற்று பேசியதாவது: காசி தமிழ் சங்கமம்  நிகழ்ச்சி நடத்தியது போன்று,  தற்போது குஜராத் மாநில  மற்றும் ஒன்றிய அரசு இணைந்து  `சவுராஷ்டிரா தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியை பிரமாண்டமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  குஜராத்தில் உள்ள சவுராஷ்டிரா மற்றும் மதுரை, சென்னை, நெல்லை, தஞ்சாவூர்  உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்களில் உள்ள கலாசார தொடர்பை   கண்டறியவும், உறுதிபடுத்தவும் இந்த விழா உதவும். பல ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் இருந்து தமிழ்நாடு வந்த சவுராஷ்டிரா  மக்கள், இந்த பகுதி மக்களுடன் இணைந்து திறம்பட வாழ்ந்து வருகின்றனர். இரு  மாநிலங்களுக்கும் இடையே உள்ள கலாசாரம், தொழில்வளம், ஆலயங்கள் மற்றும் பிற  சிறப்பு அம்சங்களை அறிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்.

குஜராத்  `சவுராஷ்டிரா தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியில் பங்கேற்க   சுமார் 3  ஆயிரம் பேர் அழைத்து செல்லப்பட உள்ளனர். இதற்காக இணையதளத்தில்  விண்ணப்பிக்க வேண்டும். குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் நபர்கள்  மதுரையில் இருந்து தனி ரயிலில் அழைத்துச் செல்லப்படுவார்கள். விழா நடைபெறும்  அனைத்து  நாட்களிலும் அவர்கள் குஜராத்  மாநிலத்தில் சிறப்பு  விருந்தினர்களாக நடத்தப்படுவார்கள். நெல்லை மாவட்டம் அதன்  தனித்துவ  கலாசாரத்துடன் விளங்கி வருகிறது. கோதுமை அல்வா, பிடி  கொளுக்கட்டை போன்ற தனித்துவம் வாய்ந்த உணவு, கரகாட்டம், காவடி ஆட்டம்   போன்ற நாட்டுப்புற கலைகள், பாரம்பரிய இசை ஆகியவற்றுக்கு பெயர் பெற்ற  நகரமாக உள்ளது. நெல்லையில் மட்டும்  சவுராஷ்டிரா தமிழர்கள்  60 ஆயிரம்  பேர் வாழ்கின்றனர். குஜராத் `சவுராஷ்டிரா தமிழ் சங்கமம்’   நிகழ்ச்சி இரு  மாநிலங்களுக்கும் இடையே பல ஒற்றுமைகளை கொண்டுள்ளது. சவுராஷ்டிரர்களின்  பங்களிப்பை கவுரவித்து அவர்களை பாதுகாக்க வாய்ப்பாக அமையும். இவ்வாறு  அவர் பேசினார்.

பின்னர் அமைச்சர் ருஷிகேஷ் கணேஷ்பாய் படேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அழகிய கலை  சிற்பங்களுடன் ஆன்மீக வரலாற்றை விளக்கும் வகையில் நெல்லையப்பர்   கோயில்  விளங்குகிறது. இந்தியாவில் தமிழ்நாட்டில்தான்  அதிக பாரம்பரியமிக்க வரலாற்று   சிறப்பு மிக்க கலைக்கோயில்கள் உள்ளன. தமிழ்நாடு  மிகவும்  சிறப்பான மற்றும்   அமைதியான மாநிலமாக உள்ளது. வந்தாரை வாழ  வகைக்கும் மாநிலமாக திகழ்கிறது. அனைத்து மொழி பேசும் மக்களையும் அரவணைக்கும் மாநிலமாக உள்ளது.   இங்கு வருபவர்களை தமிழ்நாடு மக்கள்  ஆதரித்து அரவணைத்து நட்பாக பழகி   வருகின்றனர். இது வரவேற்கத்தக்கது. இவ்வாறு கூறினார்.

முன்னதாக  பாளை சவுராஷ்டிரா  சபை தலைவர் ஜோதி கிருஷ்ணன் வரவேற்றார். தமிழ்நாடு   சவுராஷ்டிரா  பெடரேசன்  மாநில தலைவர் அனந்தராமன் அறிமுக உரையாற்றினார்.   மத்திய சபை துணை தலைவர் சுரேஷ்குமார், சவுராஷ்டிரா பல்கலைக்கழக துணைவேந்தர் கிரீஸ்பாய் பிமானி, குஜராத் மாநிலம் மேக்சனா மாவட்ட கலெக்டர்   நாகராஜன் மற்றும் இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத், பாஜ  மாவட்ட தலைவர் தயாசங்கர், மாநகராட்சி 28வது வார்டு உறுப்பினர் சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாளை. சவுராஷ்டிரா சபா செயலாளர் ராமதாஸ்  நன்றி கூறினார்.

Related Stories: