குஜராத்தில் நடைபெறும், சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்வில் பங்கேற்க வேண்டும்: திண்டுக்கல் மக்களுக்கு அமைச்சர் அழைப்பு

திண்டுக்கல்: குஜராத்தில் நடைபெறும் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு வருமாறு திண்டுக்கல் மக்களுக்கு குஜராத் அமைச்சர் குபேர்பாய் திண்டோர் அழைப்பு விடுத்தார்.

குஜராத்தில் சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஏப்.17ம் தேதி முதல் ஏப்.30ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கு தமிழ்நாட்டில் உள்ள சவுராஷ்டிரா மக்களுக்கு அழைப்பு விடுக்க குஜராத் அமைச்சர்கள் 8 பேர் தமிழ்நாடு வந்துள்ளனர். திண்டுக்கல்லில் உள்ள சவுராஷ்டிரா மக்களை அழைப்பு விடுப்பதற்காக குஜராத் அமைச்சர் டாக்டர் குபேர்பாய் திண்டோர், பழங்குடியினர் வளர்ச்சி துறை செயலாளர் டாக்டர் முரளி கிருஷ்ணா நேற்று திண்டுக்கல் வந்திருந்தனர். இவர்களை சவுராஷ்டிரா சபை தலைவர் ராமமூர்த்தி வரவேற்றார். பின்னர் திண்டுக்கல் நாகல் நகரில் சவுராஷ்டிரா சபை அழைப்பிதழ் கூட்டம் நடைபெற்றது.

நிர்வாகிகள் அருள்ஜோதி துவக்கி வைக்க, சிவராம், கண்ணன் சேஷாத்திரி, ஹரிகரன், முரளிதரன் வாழ்த்துரை வழங்கினர். பின்னர் அமைச்சர் குபேர்பாய் திண்டோர் பேசுகையில், ‘‘குஜராத்தில் நடைபெறும் சவுராஷ்டிரா தமிழ் சங்கம் நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். அதற்காக குஜராத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 14 நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் அனைவரும் வந்து சிறப்பிக்க வேண்டும்’’ என்றார். முன்னதாக அமைச்சருக்கு, பெண்கள் கோலாட்டம் ஆடி வரவேற்பு அளித்தனர். அப்போது அமைச்சர், பெண்களுடன் கோலாட்டம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். நிர்வாகி பாபுலால் நன்றி கூறினார்.

Related Stories: