திண்டுக்கல், தேனி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், போலீசாரின் நடவடிக்கையால் கஞ்சா பயிரிடுவது முற்றிலும் தடுப்பு: டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி

திண்டுக்கல்: திண்டுக்கல், தேனி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் போலீசாரின் நடவடிக்கையால் கஞ்சா பயிரிடுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு நேற்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு வருகை தந்தார். பின்னர் அவர், திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் கொள்ளை, செல்போன் திருட்டு போன்ற வழக்குகளில் குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.50 கோடி மதிப்புள்ள பணம், நகைகள் செல்போன்கள் ஆகியவற்றை உரியவர்களிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து டிஜிபி திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் என 68 பேருக்கு வெகுமதி மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரப்படுத்தினார். பின்னர் டிஜிபி திண்டுக்கல், தேனி மாவட்ட காவல்துறை  உயரதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். கூட்டத்தில் தென் மண்டல ஐஜி அஸ்ரா  கார்க், திண்டுக்கல் சரக டிஐஜி அபினவ் குமார், திண்டுக்கல் எஸ்பி  பாஸ்கரன், தேனி எஸ்பி டோங்ரோ பிரவீன் உமேஷ் மற்றும் திண்டுக்கல், தேனி  மாவட்ட டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்ககள் மற்றும் போலீசார் கலந்து  கொண்டனர்.

முன்னதாக டிஜிபி சைலேந்திரபாபு, செய்தியாளர்களிடம் கூறியதாவது: திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் நடந்த கொள்ளை வழக்கில், மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி போன்ற வெளிமாநிலங்களுக்கு காவல்துறையினர் சென்று, ஏராளமான குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து பணம், நகை, செல்போன் என ரூ.1.50 கோடி மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த காலங்களில் அதிகளவில் கஞ்சா செடிகள் பயிர் செய்யப்பட்டு  விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது போலீசாரின் துரித நடவடிக்கையின் காரணமாக கஞ்சா செடி பயிர் செய்வது முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது ஆந்திரா, ஒடிசாவிலிருந்து கஞ்சா விற்பனைக்காக தமிழகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 80 சதவீதத்திற்கும் மேல் கஞ்சா விற்பனை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கஞ்சா பயன்படுத்தி வந்தவர்களில் ஒரு சிலர்,  மருந்துக்கடையில் மருந்து, மாத்திரைகளை  போதைக்காக பயன்படுத்தி வருகின்றனர். அதனை  தடுப்பதற்கான கண்காணிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்காக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் போதை பொருள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

Related Stories: