உத்திரமேரூரில் அரசு பள்ளியில் கற்றல் திருவிழா

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அரசு பள்ளியில் கற்றலை கொண்டாடுவோம் திருவிழா நேற்று நடைபெற்றது. உத்திரமேரூர் 1 முதல் 3 வார்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், கடந்த ஆண்டு தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட எண்ணும் எழுத்து திட்டம் துவங்கி, ஓராண்டு நிறைவையொட்டி கற்றலை கொண்டாடுவோம் திருவிழா நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில், பள்ளி தலைமை ஆசிரியர் சந்தானலட்சுமி தலைமை தாங்கினார். வட்டார ஆசிரிய பயிற்றுனர் ராஜேஷ், பேரூராட்சி மன்ற துணை தலைவர் இளமதிகோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆசிரியைகள் சசிகலா, இந்திராணி, புஷ்பலதா ஆகியோர் அனைவரையும் வரவேற்று விழாவினை தொகுத்து வழங்கினர். இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு கற்றலை கொண்டாடுவோம் நிகழ்வினை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், எண்ணும் எழுத்தும் சிறப்பு நிகழ்வுகள் குறித்து கலந்துரையாடினர். மேலும் கதைக்களம், பாடல்களம், பொம்மலாட்டகளம், பேச்சுக்களம், படித்தல்களம், செயல்பாட்டுக்களம், வினாடி வினாக்களம், போன்ற பல்வேறு களங்களுக்கான அரங்குகள் அமைக்கப்பட்டு மாணவ, மாணவிகள் அதற்கான விளக்கம் அளித்து அசத்தினர்.

இதேபோல் பள்ளி மாணவ - மாணவிகளின் படைப்புகள் அனைத்து கற்றல் உபகரணங்களும் அரங்குகளில் வைக்கப்பட்டு பொதுமக்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பொதுமக்கள், பெற்றோர், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளை பாராட்டினர்.

Related Stories: