தந்தை இறந்த சோகத்திலும் தேர்வு எழுதிய மாணவன்: கரூர் அருகே நெகிழ்ச்சி

கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் திருக்காம்புலியூர் ஊராட்சிக்குட்பட்ட எழுதியாம்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம்(49). விவசாய கூலி தொழிலாளி. இவருக்கு கோமதி என்ற மனைவி, 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் மோகனகிருஷ்ணன்(21) கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்.  இளைய மகன் நந்தா (17), லாலாபேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். ஆறுமுகம் நேற்று முன்தினம் மாலை கூலி வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் ஆறுமுகம் இறந்தார்.  நேற்று காலை இளைய மகன் நந்தா 12ம் வகுப்பு பொதுத் தேர்வான இயற்பியல் தேர்வு எழுத வேண்டி இருந்தது. இதனால் ஆறுமுகத்தின் இறுதிச் சடங்கை, தேர்வு எழுதி விட்டு வந்த பிறகு நடத்தலாம் என குடும்பத்தினரால் தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை மாணவன் நந்தா, லாலாபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினார். தேர்வு நேரம் முடிந்ததும் அவசரமாக வீட்டிற்கு சென்று தந்தை உடலை பார்த்து கதறி அழுதார். பிறகு தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

Related Stories: