வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் ₹90 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனை

வேலூர் : வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தையில் ₹90 லட்சத்துக்கு கால்நடைகள் விற்பனையானது.தமிழ்நாட்டின் முக்கிய கால்நடை வாரச்சந்தைகளில் வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச்சந்தை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் நடைபெறும். இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் இருந்து வி.கோட்டா, குப்பம், பலமநேர், புங்கனூரு என பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

இதனால் சீசன் நேரங்களில் இந்த சந்தையில் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறும். இந்நிலையில் கடந்த பொங்கலுக்கு முன்பு நடந்த கால்நடை சந்தையில் விற்பனை வழக்கத்தை விட அதிகரித்தது. அதை தொடர்ந்து கடந்த வாரமும் மாட்டுச்சந்தை களைக்கட்டியது. இதற்கு தீவனம் தாராளமாக கிடைப்பதே காரணம் என்று விவசாயிகள் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று கறவை மாடுகள், ஜெசி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள் என 900க்கும் மேற்பட்ட மாடுகளும், ஆடுகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

மேலும், கோழிகளும் அதிகளவில் விற்பனைக்காக குவிந்து பொய்கை மாட்டுச்சந்தை களைக்கட்டியது. அதேநேரத்தில் கடந்த வாரத்தை விட இந்த வாரம் விற்பனை என்பது சற்று அதிகமாக உள்ளது.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கோடை வெயில் தொடங்கி உள்ளதால் தீவனம் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் விவசாயிகள் முன்கூட்டியே மாடுகளை நல்ல விலைக்கு விற்பனை செய்துவிடுகிறார்கள்.

இதனால் அவர்களுக்கு நஷ்டம் ஏற்படாது. இதனால் விவசாயிகள் அதிகளவில் மாடுகளை கொண்டு வருகின்றனர். 900க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு வந்தது. இதன்மூலம் சுமார் ₹90 லட்சத்துக்கு மேல் வர்த்தகம் நடந்துள்ளது’ என்றனர்.

Related Stories: