பொள்ளாச்சி சந்தையில் ரூ.1.70 கோடிக்கு மாடுகள் விற்பனை

பொள்ளாச்சி :  பொள்ளாச்சி சந்தையில் நேற்று ரூ.1.70 கோடிக்கு கால்நடை வர்த்தகம் நடைபெற்றது.பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள மாட்டு சந்தைக்கு, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் நடக்கும் சந்தை நாளின்போது, சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்தும் மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இதனை பெரும்பாலும் கேரள வியாபாரிகளே குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து வாங்கி செல்கின்றனர்.

இதில், கடந்த மாதம் துவக்கத்தில் மாடுகள் வரத்து ஓரளவு இருந்ததுடன், கேரள வியாபாரிகள் வருகையும் அதிகரிப்பால், தொடர்ந்து மாடுகள் கூடுதல் விலைக்கு விற்பனையானது. அதன்பின், 3வது வாரத்திலிருந்து, புனிதவெள்ளி நோன்பு கடைபிடிப்பால் மாடு வரத்து குறைவாக இருந்ததுடன், அந்நேரத்தில் கேரள வியாபாரிகள் வருகை மிகவும் குறைவால் விற்பனை மந்தமானது.

இதனால், உள்ளூர் பகுதி வியாபாரிகளே, மாடுகளை குறிப்பிட்ட விலை நிர்ணயம் செய்து குறைந்த விலைக்கு வாங்கி சென்றனர். நேற்று, நடைபெற்ற சந்தைநாளின்போது கிராம பகுதியிலிருந்தே ஓரளவு மாடுகள் வரத்து இருந்தது. ஆந்திர மற்றும் கர்நாடக மாநில பகுதியிலிருந்து மாடுகள் வரத்து குறைவாக இருந்தது.ஆனால், கிறிஸ்துமஸ் நோன்பு நிறைவடையும் நிலையில் இருப்பதால், நேற்று சந்தைக்கு கேரள வியாபாரிகள் வருகை அதிகமாக இருந்தது. இதனால் சுமார் ஒரு மாதத்திற்கு பிறகு விற்பனை விறுவிறுப்பானதுடன், அனைத்து ரக மாடுகளும் கூடுதல் விலைக்கு விற்பனையாகியுள்ளது.

 இதில் எருமை மாடு ரூ.40 ஆயிரம் வரையிலும், பசுமாடு ரூ.36 ஆயிரம் வரையிலும், காளை மாடு ரூ.38 ஆயிரம் வரையிலும், கன்று குட்டி ரூ.15ஆயிரத்துக்கும் என கடந்த வாரத்தைவிட கூடுதலாக விற்பனையானது. கடந்த சில வாரமாக சந்தைநாளில் ரூ.1.20 கோடி முதல் ரூ.1.30 கோடி வரையிலேயே வர்த்தகம் இருந்தது. ஆனால், நேற்று ரூ.1.70 கோடி வரை வர்த்தகம் இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: