திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று யுகாதி ஆஸ்தானம்: கொலு வைத்து பஞ்சாங்கம் படிக்கப்படுகிறது

திருமலை: ஏழுமலையான் கோயிலில் இன்று யுகாதி ஆஸ்தானம் நடைபெற உள்ளது. இதையொட்டி கொலு வைத்து பஞ்சாங்கம் படித்து காண்பிக்கப்பட உள்ளது.  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று யுகாதி ஆஸ்தானம் நடைபெற உள்ளது. இதனையொட்டி நேற்று கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. ஆண்டுக்கு நான்கு முறை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம். இதில் யுகாதி, ஆனிவார ஆஸ்தானம், பிரமோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய உற்சவங்களுக்கு முந்தைய செவ்வாய்கிழமையன்று கோயில் முழுவதும் சுத்தம் செய்யும் ஆழ்வார் திருமஞ்சனம்  நடத்தப்படுகிறது.  இன்று யுகாதியையொட்டி நேற்று காலை 6 மணி முதல் 11 மணி வரை கோயில்  முழுவதும் சுத்தம் செய்யும் நிகழ்ச்சி அர்ச்சகர்களால்  நடைபெற்றது. கோயிலில் உள்ள மூலவர் சிலை மீது பட்டு வஸ்திரம் கொண்டு மூடப்பட்டு கருவறை, ஆனந்த நிலையம், துணை சன்னதிகள், கொடிமரம், பலிபீடம், கோயில் வளாகங்கள், சுவர்கள், மேற்கூரை, பூஜை சாமான்கள் என அனைத்தும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது.

பின்னர் நாமகட்டி, திருச்சூர்ணம், கஸ்தூரி மஞ்சள், பச்சை கற்பூரம், கட்டி கற்பூரம், சந்தனம், குங்குமம், கிச்சிலிக்கிழங்கு போன்ற மூலிகை வாசனை திரவியம் கலந்து கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது. அதன்பின், சுவாமியின் மூலவர் மீது வைக்கப்பட்ட   துணி அகற்றப்பட்டு, சிறப்பு பூஜையை அர்ச்சகர்கள் ஆகம முறையில் செய்தனர்.  மதியம் 11 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். யுகாதி ஆஸ்தானத்தையொட்டி கோயிலில் மூலவருக்கும் உற்சவருக்கும் சிறப்பு பட்டு வஸ்திரம், நைவேத்தியம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. பின்னர் சர்வபூபால வாகனத்தில் உற்சவ மூர்த்திகளுக்கு கருடாழ்வார் சன்னதி அருகே கொலு வைத்து பஞ்சாங்கம் படித்து காண்பிக்கப்பட உள்ளது.

Related Stories: