வாலாஜா : வாலாஜா வழியாக செல்லும் பஸ்களில் படிக்கட்டில் தொங்கியபடி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆபத்தை உணராமல் பயணிப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வழியாக சோளிங்கர், முசிறி, தலங்கை, புதுப்பட்டு, வேலூர், வள்ளுவம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும், வாலாஜா, ராணிப்பேட்டை, ஆற்காடு நகரங்களில் ஆண்களுக்கான அரசு அல்லது அரசு நிதியுதவி பெறும் கல்லூரிகள் எதுவும் இல்லை.
மேல்விஷாரத்தில் மட்டுமே அரசு நிதியுதவி பெறும் கல்லூரி ஒன்று உள்ளது. இந்த கல்லூரியில் வாலாஜா, பாணவரம், காவேரிப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். இந்த மாணவர்கள் ஆற்காடு வரை சென்று அங்கிருந்து மற்றொரு டவுன் பஸ்சில் கல்லூரிக்கு செல்ல வேண்டும். இதில், பல பள்ளி மாணவர்கள் ஆற்காட்டிற்கு டவுன் பஸ்சில் செல்கின்றனர். அவர்கள், காலை நேரத்தில் வரும் சில டவுன் பஸ்களில் கல்லூரிக்கு செல்கின்றனர்.
மேலும், பரபரப்பான காலை நேரத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் தொழிலாளர்களும் இந்த பஸ்களில் பயணிக்கின்றனர். இதனால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்கள். இந்நிலையில், நேற்று இடையந்தாங்கல் கிராமத்தில் இருந்து ஆற்காடு செல்லும் டவுன் பஸ்சில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சிலர் பயணம் செய்தனர். அப்போது, அவர்களுக்குள் போட்டி போட்டு கொண்டு பஸ் நிற்கும்போது ஏறாமல் ஓடும் பஸ்சில் தாவி குதித்து ஏறினர். பஸ் படிக்கட்டில் கால் வைப்பதற்கு கூட இடமில்லாதால் அந்தரத்தில் தொங்கியபடியே சென்றனர். மாணவர்கள் ஆபத்தை உணராமல் பயணம் செய்ததால் சகபயணிகளின் நெஞ்சம் பதற வைத்தது. இதனால், அந்த மாணவர்களை கண்டக்டர் உள்ளே வர சொல்லியும் செவிசாய்க்கவில்லை.இதுபோன்ற சாகச பயணங்களால் விபத்தில் சிக்கி பலத்த காயங்கள் அடைந்து வரும் நிலையில், பஸ்சில் மாணவர்கள் இதுபோன்ற ஆபத்தான பயணம் செய்வதை போலீசார் கண்காணித்து தடுக்க வேண்டும். அதேபோல், இந்த வழித்தடங்களில் கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.