பைக் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து கணவன் கண் எதிரே மனைவி தலை நசுங்கி பலி: ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே பைக் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானதில், கணவன் கண் எதிரே மனைவி தலை நசுங்கி பரிதாபமாக பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, சூளை படாளம் பகுதியை சேர்ந்தவர் ஜானகிராமன் (48). இவரது, மனைவி ஜெயந்தி (45). இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு, நேற்று காலை பைக்கில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக வீடு திரும்பிகொண்டிருந்தனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் சென்றனர்.

அப்போது, பின்னால் வந்த கண்டெய்னர் லாரி, பைக் மீது மோதியது. இதில், பைக்கின் பின்னால் அமர்ந்து வந்த ஜெயந்தி லாரி சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். விபத்தில், ஜானகிராமன் சிறிய காயங்களுடன் உயிர் தரப்பினார். இந்த விபத்தால் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது. இது குறித்து, தகவலறிந்து வந்த சுங்குவார்சத்திரம் போலீசார் ஜெயந்தியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை சரிசெய்து விபத்துக்கான காரணம் குறித்து, சுங்குவார்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: