ஒலி முகமதுபேட்டை - அரக்கோணம் இடையிலான சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம்: பொதுமக்கள் அச்சம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஒலி முகமதுபேட்டை - அரக்கோணம் சாலை சந்திப்பு பகுதியில், கழிவுநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதால், மர்ம காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சி ஒலிமுகமதுபேட்டை பகுதியில் அரக்கோணம் சாலை விரிவாக்கப்பணி கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இதற்காக, சாலையின் ஓரத்தில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெறுவதால், ஒலிமுகமதுபேட்டை - அரக்கோணம் சாலை சந்திப்பு பகுதியில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஆறாக ஓடுவதால், தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் மற்றும் வேலூர் மார்க்கமாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் கனரக வாகனங்கள், பேருந்துகள் இந்த வழியாக செல்லும் போது கழிவுநீரை வாரி இறைத்து விட்டு செல்கின்றன. இதனால், அருகில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இது குறித்து இப்பகுதி மக்கள் தெரிவித்ததாவது: சுமார் 1 மாத காலமாக கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீட்டில் இருந்து வெளியில் வர முடியவில்லை. வாசல் முழுவதும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தோம். அப்போதைக்கு கழிவுநீர் உறிஞ்சி எடுக்கப்பட்டது. மீண்டும் மறுபடியும் அதே நிலைதான், என்ன செய்வதென்றே தெரியவில்லை.

மேலும், இதுகுறித்து கேட்டால் நெடுஞ்சாலைத்துறை சாலை விரிவாக்கப் பணி நடைபெறுவதால் கழிவுநீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை கேளுங்கள் என்று தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரம் பகுதியில் ஏற்கனவே பொதுமக்கள் அதிகளவில் காய்ச்சல், ஜலதோஷம் என அவதிப்பட்டு அரசு மருத்துவமனையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இங்கு தேங்கியுள்ள கழிவுநீரால் என்னென்ன நோய்கள் வருமோ என அச்சம் தெரிவிக்கின்றனர்.

வளர்ச்சிப் பணிகள் நடைபெறும்போது, பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். மேலும், சாலை விரிவாக்கப் பணிக்கான வேலை தொடங்கும்போது சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகம், அப்பகுதி மக்கள் பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து ஆலோசனை நடத்தி திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதில், பாதிப்புக்குள்ளாகும் பொதுமக்களை அலைக்கழிக்காமல் அரசும், அதிகாரிகளும் மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: