தடுப்பு சுவரில் பைக் மோதி விபத்து இரு வாலிபர்கள் பரிதாப பலி: எளாவூர் சோதனை சாவடி அருகே பயங்கரம்

கும்மிடிப்பூண்டி: ஆந்திர மாநிலம், பனங்காடு - எளாவூர் சோதனை சாவடி அருகே, பைக் தடுப்பு சுவரில் மோதியதில், இரு வாலிபர்கள் தலையில் பலத்த காயமடைந்து பரிதாபமாக பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்மிடிப்பூண்டியை அடுத்து எளாவூர் சோதனை சாவடி உள்ளது. இந்த இருவழி தடங்கல் சோதனை சாவடியில் டெல்லி, மும்பை, சென்னை, ஆந்திரா, கர்நாடகா, பீகார், ஒரிசா, அரியானா, குஜராத், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரம், சீக்கிம், மேகாலயா, உத்தரப்பிரதேசம், சட்டீஸ்கர், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து, தினந்தோறும் லாரி, கார், வேன் முலமாக காய்கறி, கோதுமை, லாரி உதிரிபாகம் பொருட்கள், ஆட்டோமொபைல் பொருட்கள், ராக்கெட் தளவாடங்கள், மீன், இறா உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஏற்றிக்கொண்டு மேற்கண்ட சாலை வழியாக போக்குவரத்து நடந்து வருகிறது.

இந்நிலையில், சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், எளாவூர் சோதனை சாவடியையொட்டி ஆந்திரா மாநிலம் எல்லை உள்ளது. இந்த எல்லை ஓரமாக ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் சோதனை சாவடிக்கு திரும்புவதற்காக, இடது புறமாக சாலை அமைக்கப்பட்டு, தடுப்பு சுவர்களும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் குண்டும், குழியுமாகவும் அறிவிப்புப் பலகையும், ரிப்லெக்ட்டர் அமைக்கப்படாமலும் சில மாதங்களாக செயல்பட்டு வருகிறது. இதனால், இரவு நேரங்களில் சில லாரி டிரைவர்கள் நேராக சென்றும், குறுகிய தூரத்தில் சென்று, தடுப்பைப் பார்த்து திடீரென திரும்புவது வழக்கமாக உள்ளது. ஆனால், இதுநாள் வரை எந்த உயிரிழப்புகளும், விபத்துகளும் ஏற்படாத குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நேற்று அதிகாலை 5.30 மணியளவில், 2 பேர் ஆந்திராவிலிருந்து சென்னை நோக்கி வந்துள்ளனர்.

அப்போது எளாவூர் சோதனை சாவடி செல்வதற்காக, இடது புறமாக திரும்பாமல் நேராக சென்றுள்ளனர். அப்போது எதிரே இருந்த தடுப்பு சுவரில் மோதி, 2 பேரும், தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து, தகவலறிந்த ஆரம்பாக்கம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது, மேற்கண்ட சாலை விபத்து நடந்த இடம் ஆந்திராவுக்கு சொந்தமான பனங்காடு பகுதி என்று அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து, ஆந்திரா மாநில கிராம நிர்வாக அலுவலர், விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து, ஆன்லைன் மூலம் வரைபடத்தை சோதனை செய்தபோது, விபத்துக்குள்ளான இடம் ஆந்திரா மாநிலம் என்பதும், இதே இடத்தில் 4 வருடங்களுக்கு முன்பு, பன்னீர் என்பவர் கொலை செய்யப்பட்டு இருந்ததால், இது ஆந்திரா மாநிலத்துக்கு சொந்தமான இடம் என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து, தடா போலீசாருக்கு  இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இறந்த 2 பேரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சூலூர்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் இந்த விபத்து குறித்து நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த அருண்(30), வெங்கட்ரமணா(31) என்பதும், இவர்கள் வந்த பைக்கில் மதுபாட்டில்கள் இருந்ததும் தெரியவந்தது.

மேலும், போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்தில் இறந்த அருண், வெங்கட்ரமணா ஆகிய 2 பேரும் மதுபோதையில்தான் இடித்து உள்ளார்களா? என்ற சந்தேகத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேற்கண்ட சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், எளாவூர் சோதனை சாவடி இடதுபுறம் உள்ள சாலையில் குண்டு குழியுமாக உள்ள இடத்தில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் எனவும், சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, எளாவூர் சோதனை சாவடி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, திருவள்ளூர் கலெக்டருக்கு, வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: