நேரு குடும்ப பெயர் குறித்து பேச்சு: பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்: மாநிலங்களவையில் காங். தாக்கல்

புதுடெல்லி: நேரு குடும்ப பெயர் தொடர்பாக பிரதமர் மோடி பேசியதற்கு எதிராக மாநிலங்களவையில் காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளது. பட்ஜெட் முதல்கட்ட கூட்டத் தொடரின் போது, கடந்த மாதம் 9ம் தேதி மாநிலங்களவையில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்து பேசிய பிரதமர் மோடி, ‘காந்தி குடும்பத்தினர் ஏன் நேருவின் பெயரை குடும்ப பெயராக வைக்கவில்லை’ என கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால், மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரிடம் பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளார்.

அந்த நோட்டீசில், ‘தந்தையின் குடும்பப் பெயரை இந்திரா காந்தி வைத்துக் கொள்ளவில்லை என்பதை பிரதமர் மோடி அறிவார். அது தெரிந்திருந்தும் அவர் வேண்டுமென சோனியா காந்தி, ராகுல் காந்தியை அவமதித்தும், இழிவுபடுத்தும் வகையில் பேசி உள்ளார். அவரது கருத்துகள் அவமானகரமானது. தனது வெறுப்பூட்டும் பேச்சால் அவையையும் பிரதமர் மோடி அவமதித்துள்ளார். எனவே உரிமைமீறல் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: