புதுடெல்லி: டெல்லி நேரு நினைவு அருங்காட்சியகத்தில் இருந்து நேருவின் அனைத்து தனிப்பட்ட குடும்பக் கடிதங்கள் உள்ளிட்ட ஆவணங்களை 51 அட்டைப் பெட்டிகளில் வைத்து சோனியா காந்திக்கு கடந்த 2008ல் அனுப்பப்பட்டன. 2023ல் நேரு நினைவு அருங்காட்சியகம் பிரதமர்களின் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேருவின் ஆவணங்களை வைத்திருப்பதற்காக சோனியா காந்தியை ஒன்றிய அரசு கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
இதுதொடர்பாக ஒன்றிய கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தனது எக்ஸ்பதிவில் கூறியிருப்பதாவது:
நேரு காலத்தின் முக்கியமான வரலாற்றுப் பதிவுகளை அறிஞர்களும், நாடாளுமன்றமும் அணுகும் வகையில், அந்த ஆவணங்களை பிரதமர்களின் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்திடம் திருப்பித் தர வேண்டும். இது ஒரு சாதாரண விஷயம் அல்ல. வரலாற்றைத் தேர்ந்தெடுத்துத் தொகுக்க முடியாது. ெளிப்படைத்தன்மையே ஜனநாயகத்தின் அடித்தளம். ஆவணக் காப்பகத் திறந்த தன்மை அதன் தார்மீகக் கடமையாகும். பல நினைவூட்டல்களுக்குப் பிறகும் இந்த ஆவணங்கள் ஏன் திருப்பித் தரப்படவில்லை? இந்த தேசம் தெளிவுக்குத் தகுதியானது.
சோனியா காந்தியிடம் நான் மரியாதையுடன் கேட்கிறேன்: என்ன மறைக்கப்படுகிறது? என்ன ஒளித்து வைக்கப்படுகிறது? இந்த ஆவணங்களைத் திருப்பித் தராததற்கு சோனியா காந்தி கூறும் சாக்குப்போக்குகள் ஏற்கத்தக்கவை அல்ல. முக்கியமான வரலாற்று ஆவணங்கள் ஏன் இன்னும் பொது ஆவணக் காப்பகத்திற்கு வெளியே உள்ளன என்பதுதான் கேள்வி. இவை தனிப்பட்ட குடும்ப ஆவணங்கள் அல்ல. அவை இந்தியாவின் முதல் பிரதமருடன் தொடர்புடையவை மற்றும் நமது தேசிய வரலாற்றுப் பதிவின் ஒரு பகுதியாகும். இத்தகைய ஆவணங்கள் பொது ஆவணக் காப்பகங்களில் இருக்க வேண்டும், மூடிய கதவுகளுக்குப் பின்னால் அல்ல. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
