வட்டக்கானல் வனப்பகுதி உள்பட கொடைக்கானலில் தொடரும் காட்டுத்தீ: டால்பின் நோஸ் செல்ல தடை

கொடைக்கானல்: கொடைக்கானல் வட்டக்கானல் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக, டால்பின் நோஸ் பகுதிக்கு செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக செண்பகனூர் சிட்டி வியூ பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன் காட்டுத்தீ உருவானது. இது வெகுவேகமாக பரவியதால் பல ஏக்கர் பரப்பளவில் இருந்த மரங்கள் எரிந்து நாசமாகின. தொடர்ந்து எரிந்த காட்டுத்தீயால் நகர் பகுதி முழுவதிலும் புகை மண்டலம் சூழ்ந்தது.

இந்த நிலையில் கொடைக்கானல் வட்டக்கானல் வனப்பகுதியில் டால்பின் நோஸ் சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது. இப்பகுதியில் திடீரென்று நேற்று காட்டுத்தீ உருவானது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. அத்துடன், அப்பகுதியில் உள்ள திருவள்ளுவர் நகர் பகுதியில் புகை கடுமையாக  சூழ்ந்துள்ளது. மேலும், இந்த இடம் பிரபல சுற்றுலா இடமாக இருப்பதால் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு கருதி அப்பகுதிக்கு செல்ல தடை விதித்து கொடைக்கானல் ஆர்டிஓ ராஜா உத்தரவிட்டுள்ளார். காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். முழுமையாக கட்டுப்படுத்துவதில் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றனர்.

இதேபோல் கொடைக்கானல் - பழநி சாலையில் வடகவுஞ்சி அருகே மலைப்பகுதியில் நேற்று திடீரென்று தீப்பற்றியது. இந்த தீ வெகு வேகமாக பரவியதால் பிரதான சாலை அருகே உள்ள மரங்களும் பற்றி எரிந்தன. இதனால் இந்த பகுதியில் பயணித்த சுற்றுலாப்பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர்.

Related Stories: