போதைப்பொருள் வினியோகம் வெளிநாட்டை சேர்ந்த 13 பேர் கைது

பெங்களூரு: பெங்களூருவில் போதை பொருட்கள் கடத்தல், வினியோகத்தில் ஈடுபட்ட வெளிநாட்டை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட  13 பேர்களை கைது செய்த போலீசார் ரூ.2.48 கோடி மதிப்பிலான கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். பெங்களூரு மாநகரில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கம் அதிகரித்த நிலையில் இது குறித்து விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசார், ஹெண்ணுரு,  கொடிகேஹள்ளி,  எஸ்எஸ்ஆர் லே அவுட், புட்டேனஹள்ளி, தலகட்டபுரா, கோரமங்களா உள்ளிட்ட பகுதிகளில் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 1.556 கிலோ எடையுள்ள எம்டிஎம்ஏ கிரைஸ்டல், 25 கிலோ கஞ்சா , கார், பைக், செல்போன்கள் சிக்கின.  குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்த போதை பொருட்களை மாநகர போலீ்ஸ் கமிஷனர் பிரதாப்ரெட்டி மற்றும் அதிகாரிகள் நேற்று பார்வையிட்டு இந்த சோதனையில் ஈடுபட்ட போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தார்.

இது குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது: போதை பொருட்கள் பயன்படுத்துவது தவறாகும். இதை பயன்படுத்தும் நபர்கள் பற்றிய தகவல் கிடைத்தால் பொதுமக்கள் போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும்.  போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும் நபர்களின் பெயர் மற்றும் விபரம் எந்த காரணத்தை கொண்டும் வெளியிடப்படாது.  மாணவர்கள் மத்தியில் காணப்படும் போதை பழக்கம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றார்.

Related Stories: