கடலூர் அருகே பக்தர் தலையில் நெருப்பு வைத்து பொங்கலிடும் வினோத விழா

கடலூர்: வேப்பூர் அருகே அங்காளம்மன் கோயிலில் பக்தர் தலையில் நெருப்பு வைத்து  பொங்கலிடும் வினோத விழா நடந்தது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சேப்பாக்கம் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோயிலில் மாசி மாதம் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக நடைபெறும். தற்போது 5ம் நாள் திருவிழாவான நேற்று சுவாமி வீதியுலா வரும்போது, பக்தர் ஒருவர் தலையில் துணி போட்டு அதன்மீது சக்கர வடிவில் சுற்றிய துணியை மண்ணெண்ணெய்யில் நனைத்து அந்த துணியை பக்தர் தலையில் வைத்து நெருப்பு எரிய விடுகின்றனர்.

பக்தர் தலையில் எரியும் அந்த நெருப்பின் மீது ஒரு பாத்திரத்தை வைத்து அதில் அரிசி, வெல்லம் போட்டு பொங்கல் வைக்கும் வினோத நிகழ்ச்சி நடந்தது. அந்த பொங்கலை வீதியுலா வரும் சுவாமிக்கு படைத்து உடல் நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கும் பிரசாதமாக கொடுத்தனர். இந்த பிரசாதத்தை வாங்கி சாப்பிடுபவர்களின் உடல் நலம் குணமடைவதாக ஐதீகம் உள்ளது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: