நவீன வளர்ச்சி காரணமாக நலிவடைந்து வரும் மண்பானை தொழில்: தொழிலாளர்கள் வேதனை

 

செங்கல்பட்டு: கடந்த காலங்களில் அனைத்து கிராம பகுதிகளிலும் பொங்கலன்று சர்க்கரை பொங்கல், வெள்ளை பொங்கல், சாம்பார், கூட்டு ஆகியவை மண்பாண்டங்களில் மட்டுமே செய்வார்கள். அதேபோல் மறுநாள் மாட்டு பொங்கலன்று மண்பாண்டத்தில் மட்டுமே பொங்கல் மற்றும் அசைவ உணவுகளை செய்து படைப்பது வழக்கமாக இருந்து வந்தது. அதிலும் மண்ணிலான அடுப்பில்தான் சமைப்பார்கள். உலகத்தில் எந்த ஊரில் இருந்தாலும் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களான கிராம பகுதிகளில் பொங்கல் விழாவில் பாரம்பரியம் மாறாமல் மண்பாண்டத்தில் செய்த உணவுகளை சுவைத்து சாப்பிட்டு குடும்பத்தோடு கொண்டாடுவார்கள்.

தற்போது 2 டம்ளர் அரிசியில் காஸ் அடுப்பை பற்ற வைத்து குக்கரில் சமைத்து வழக்கம்போல் சமைத்து சாப்பிடுவது போல் தைப்பொங்கலன்று சர்க்கரை பொங்கலையும் சமைத்து சாப்பிடுகின்றனர். இதுதான் தற்போது பொங்கல் விழா. இன்றைய சமுதாயம் முற்றிலும் மண்பாண்டத்தை மறந்துவிட்டார்கள். அடுத்த சந்ததியினருக்கு மண்பாண்டம் என்பதே தெரியாத அளவிற்கு அழிந்துவிடும் அபாயம் உள்ளது. முன்பெல்லாம் பொங்கல் பண்டிகை வருவதற்கு முன்பாகவே பொங்கல்பானை, குழம்புச்சட்டி, அதற்குன்டான மூடிகள் என ஒருமாதத்திற்கு முன்பாகவே மண்பானை தொழிலாளர்கள் பணியை தொடங்கிவிடுவார்கள்.

இன்று பானை வியாபாரமே கிடையாது. மண்பாண்டங்கள் முற்றிலும் அழியக்கூடிய சூழலுக்கு தள்ளப்பட்டு விட்டது. தற்போது ஏதோ ஒரு சடங்கு விழா கொண்டாடுவதுபோல் பொங்கலை கொண்டாடி வருகிறார்கள். மண்பானை வியாபாரம் குறித்து, செங்கல்பட்டு அடுத்த திருமணி பகுதியில் 10 தலைமுறைகள் கடந்து பாரம்பரியமாக மண்பானை தொழில் செய்து வரும் அர்ஜூன் என்பவர் கூறுகையில், பொதுமக்கள் பாரம்பரியமிக்க மண்பானைகளில் பொங்கல் வைத்து வழிபட்டு நலமுடன் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும். எங்களை போன்றோர் பாரம்பரியமாக இதே தொழிலை 10 தலைமுறைகளாக செய்து வருகிறோம்.

எங்களுக்கு வேறு தொழில் தெரியாது. மீண்டும் பாரம்பரியமான மண்பாண்டங்களை பயன்படுத்தினால் மட்டுமே எங்களை போன்றவர்களின் வாழ்வாதாரம் செழிக்கும் என வேதனையுடன் கூறினார்.

Related Stories: