தாராபுரம் அருகே 10வது நாளாக பரபரப்பு 3 கன்றுக்குட்டிகளை தாக்கி கொன்ற சிறுத்தை: பீதியில் தவிக்கும் கிராம மக்கள்

தாராபுரம்:  தாராபுரம் அருகே 3 கன்றுக்குட்டிகளை தாக்கி கொன்று, ரத்தம் குடித்த சிறுத்தை நடமாட்டத்தால் 10வது நாளாக பரபரப்பு நிலவி வருகிறது. அப்பகுதி மக்கள் அச்சத்திலும் பீதியும் தவித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த ஊதியூர், தாயம்பாளையம், கொழுமங்குழி உள்ளிட்ட கிராம பகுதிகளில் சிறுத்தை நடமாடுவதாகவும், ஊதியூர் மலைக்கோயில் காட்டுப்பகுதியில் உள்ள குகைகளுக்குள் சிறுத்தை பதுங்கி இருந்து தனது வேட்டையை தொடர்ந்து நடத்தி வருவதாகவும் தகவல் பரவி கிராம மக்கள் இடையே அச்சம் நிலவி வருகிறது. நேற்று காலை ஊதியூர் போலீஸ் நிலையத்தை அடுத்த மின் நிலையம் அருகே சிறுத்தை சாலையை கடந்து சென்றதை 4 பெண்கள் நேரில் பார்த்து பீதியில் குலை நடுங்கிப்போயுள்ளனர்.

இந்நிலையில் ஊதியூரை சேர்ந்த சாமிநாதன் என்பவரது விவசாய தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை அங்கு இருந்த கன்றுக்குட்டி ஒன்றை கொடூரமாக தாக்கி கொன்று, ரத்தத்தை குடித்து சென்றுள்ளது. இதேபோல நேற்று முன்தினம் ஊதியூர் தெற்கு தோட்டம் பாலாமணி என்பவருக்கு சொந்தமான 6 மாதமுடைய கன்றுக்குட்டியை சிறுத்தை புலி கடித்து கொன்றுள்ளது. இதுதவிர கடந்த 10 நாட்களில் 15க்கும் மேற்பட்ட ஆடுகளை வேட்டையாடி கொன்று குவித்துள்ளது.

இது குறித்து காங்கயம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்த ஊதியூர் கிராம மக்கள், சிறுத்தை நடமாட்டம் தொடர்பான காலடி தடங்களை வனத்துறையினருக்கு காட்டியுள்ளனர். ஆனால் சிறுத்தையை பிடிப்பதற்கு கூண்டு வைக்கவோ, அடுத்த கட்ட துரித நடவடிக்கையை எடுக்கவோ அல்லது மாவட்ட வன அலுவலர் நேரில் இதுவரை வந்து ஆய்வு நடத்தவோ இல்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.  இப்பகுதியில் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு 6 வயது சிறுத்தை ஒன்று காற்றாலை மின் மாற்றியில் சிக்கி உயிரிழந்தது, இதேபோல கடந்தாண்டு ஜூன் மாதம் 22ம் தேதி தாராபுரம் வரபாளையம் அருகே சாலையை கடந்த மான்குட்டி அடையாளம் தெரியாத வாகனத்தால் மோதி உயிரிழந்தது.

அண்மையில் தாராபுரம், தாளக்கரை, மூலனூர் உள்ளிட்ட பகுதிகளின் வழியாக செல்லும் அமராவதி ஆற்றில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக கிராம மக்கள் இடையே அச்சம் எழுந்தது.இந்நிலையில் 10 நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி, இப்பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தை மனிதர்களை தாக்கி உயிர் பலி ஏற்படுவதற்குள், அதனை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கு வனத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்களும், சமூக ஆர்வலர்களும், தமிழ்நாடு முதலமைச்சருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர்

எச்சரிக்கை பேனர்

ஊதியூர் மலை மீதுள்ள உத்தண்ட வேலாயுத சாமி கோயில் நுழைவாயில் முன்பு, சிறுத்தை நடமாட்டம் குறித்து எச்சரிக்கை பேனர் ஒன்றை வனத்துறையினர் வைத்துள்ளனர்.  இது பற்றி வனச்சரக அலுவலர் தனபால் கூறும்போது, ‘‘சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். உடுமலையில் இருந்து கூண்டு கொண்டு வரப்படும். இதில் சிறுத்தை கடித்து போட்டுள்ள கன்றுக்குட்டி உடலை வைத்து பிடிக்க ஏற்பாடு செய்து வருகிறோம். பொதுமக்களும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்’’ என்றார்.

கொங்கண சித்தர் குகைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிப்பு

ஊதியூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் குறித்து தகவல் கிடைத்தவுடன் காங்கயம் வனச்சரக அலுவலர் தனபால் தலைமையில்  வனத்துறையினர், வனக்குழு தலைவர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் அப்பகுதிக்கு விரைந்தனர். சிறுத்தையால் கடிக்கப்பட்ட மாட்டுக்கன்றை ஆய்வு செய்தனர். ஊதியூர் மலை மீதுள்ள உத்தண்ட வேலாயுத சாமி கோயிலுக்கும், கொங்கண சித்தர் குகைக்கும் பொதுமக்கள் செல்ல  வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் ஊதியூர் பகுதியில் சுற்றி  திரியும் சிறுத்தை புலி 3, 4 வயது  உடையது. தற்போது அது பசியுடன் சுற்றித்திரிவதால் வனத்துறையினர்  அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: