ஓடும் ரயில் முன் செல்பி இன்ஜினியர் பரிதாப பலி

வாழப்பாடி: வாழப்பாடி அருகே ஓடும் ரயில் முன் செல்பி எடுக்க முயன்றபோது ரயில் மோதி இன்ஜினியர் உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்றுவருகிறார். சேலம்-விருத்தாச்சலம் மார்க்கத்தில் காரைக்கால்- பெங்களூரு மற்றும் பெங்களூரு- காரைக்காலுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காரைக்காலில் இருந்து சேலம் வந்து கொண்டிருந்தது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சேலம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்திற்கு அடியில் நண்பகல் 1.40 மணியளவில் ரயில் வந்தபோது, திடீரென தண்டவாளம் நோக்கி 2 பேர் ஓடி வருவதை கண்டு இன்ஜின் பைலட் ரயிலை மெதுவாக இயக்க முயன்றுள்ளார்.

ஆனால், கண்ணிமைக்கும் நேரத்தில் 2 பேர் மீதும் ரயில் உரசியவாறு சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயமடைந்தனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவரை போலீசார் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில் ஓடும் ரயில் முன் செல்பி எடுக்க முயன்றபோது இந்த விபரீதம் நடந்தது தெரிய வந்தது. விபத்தில் உயிரிழந்தவர் வாழப்பாடி அருகே சிங்கிபுரம் ஊராட்சியைச் சேர்ந்த காங்கேயத்தான்(24) என்பதும், படுகாயமடைந்தவர் அவரது நண்பர் சபரி(24) என்பதும் தெரியவந்தது. நண்பர்களான இவர்கள், நேற்று மதியம்  மது அருந்திவிட்டு போதையில்  ரயில் அருகில் ஓடி வந்து செல்பி எடுக்க முயன்றுள்ளனர். அப்போது அவர்கள் மீது ரயில் மோதியுள்ளது.

Related Stories: